மார்ச் மாதம் 3 ம் திகதிக்கு முன்னர் வடமாகாண சபைக்கு 13 வது திருத்தச் சட்டத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் வழங்க வேண்டுமென அமெரிக்காவும், பிரித்தானியாவும் விடுத்திருந்த வேண்டுகோளை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 சிபார்சுகளையும் நடைமுறைப்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களும், சர்வதேச அமைப்புகளும் சுதந்திரமாகச் செல்வதனை அனுமதித்தல் போன்ற மேலும் பல விடயங்களை மார்ச் மாதம் 3 ம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு அமெரிக்காவும், பிரித்தானியாவும் இலங்கை அரசைக் கேட்டிருந்தன.
இந்த வேண்டுகோள்களை முற்றாக நிராகரித்துள்ள இலங்கை அரசு, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளில் 86 தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், ஏனைய சிபார்சுகளில் பெரும்பாலானவற்றினை அமுல்படுத்துவது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமென்றும் தெரிவித்துள்ளதாக திவயின மேலும் குறிப்பிட்டுள்ளது.