ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்காவுக்கு சுமார் 800 குழுக்கள் வரை ஆதரவு வழங்குவதாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மேற்கத்தைய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டதன் அடிப்படையில் தமது கருத்துக்களை ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு விடுதலைப் புலிகளின் குழுக்களும் ஆதரவு வழங்குவதாக லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.
எனினும் இலங்கை அரசாங்கமும் அமெரிக்க பிரேரணைக்கு எதிராக தமது ஆதரவுக் குழுக்களுடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் யோசனை நிச்சயமாக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனை தடுக்கமுடியாது.
இந்தநிலையில் இலங்கையை பொறுத்தவரை தமது நல்லிணக்க நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்று லலித் வீரதுங்க தெரிவித்தார். இந்த நல்லிணக்க நடவடிக்கைக்கு மேலும் காலம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் ஏற்கனவே அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு நெருங்கியவரான ஒருவருடன் ஆலோசனைக்காக ஒப்பந்தம் செய்துள்ளது. எனினும் இலங்கை அரசாங்கத்தினால் அந்த நிலைமைக்கு செல்ல முடியவில்லை.
அமெரிக்காவில் தம்மை சந்தித்த காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தமது மின்னஞ்சல்களை திறக்கும் போது அதில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஒவ்வொரு நாளும் ஐம்பது என்ற அளவில் குற்றச்சாட்டுக்களை காணமுடிகிறது.
எனினும் இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து மின்னஞ்சல்களை தாம் காண்பதில்லை என்று குறிப்பிட்டதாக லலித் வீரதுங்க தெரிவித்தார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளரை மாற்றும் கோரிக்கை தொடர்பில் உண்மை நிலவரத்தை அரசாங்கம் புரிந்துக்கொண்டிருக்கிறது. எனினும் அதனை உடனடியாக செய்ய முடியாதுள்ளதாக லலித் வீரதுங்க தெரிவித்தார்.