யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவில் காணாமல் போனவர்களுக்கான பதிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்றைய தினம் 66 பேரே விசாரணைக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இன்றைய தினம் காலையிலே 106 பேர் பதிவுகளை மேற்கொண்டனர்.
தங்களின் உறவுகளும் காணமல் போயுள்ளனர் ஏன் 66 பேரை மட்டும் விசாரணை செய்கின்றீர்கள் தங்களையும் விசாரணை செய்ய வேண்டும் என இன்றைய தினம் வருகை தந்த உறவுகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதற்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேரம் போதமை காரணமாக இன்றைய தினம் கடிதம் அனுப்பப்பட்ட 66 பேர் மட்டுமே விசாரணை செய்யப்படுவார்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.
ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர்கள் இன்றைய தினம் விசாரணை செய்ய முடியாதவர்களை எப்போது விசாரணை செய்வீர்கள்?
கிளிநொச்சியிலும் இப்படித்தான் தெரிவித்து விட்டு வந்துள்ளீர்கள் எங்களுக்கும் அப்படித்தான் கூறுகின்றீர்கள் எங்களுக்கு சரியான பதிலை கூறுங்கள்.நாங்கள் இறப்பதற்கு முன்னர் எங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்து தாருங்கள், நான்கு நாட்கள் போதாது என்றால் நாட்களை கூட்டி விசாரணை செய்யுங்கள், நாங்களும் காணமல் போனவர்களின் உறவுகளே, இன்னும் எத்தனை காலங்கள் எங்கள் உறவுகளை காணாது அலைந்து திரிவது, எங்களுக்கு விடிவே கிடையாதா? என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினர்.
ஆனாலும் பலன் கிடைக்கவில்லை தாங்கள் வேறு ஒரு தினத்தில் வந்து விசாரணை செய்வதாக கூறிச் சென்றுவிட்டார்கள்.
இது ஒறுபுறமிருக்க கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு பகுதியில் வசிக்கும் ஒருவர் கொழும்பில் தமது உறவு காணமல் போனதாக முறைப்பாடு மேற்கொள்ள வந்திருந்தார்.
ஆனால் 1980 முதல் 2009 வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காணமல் போனவர்களே இங்கு விசாரணை செய்யப்படுவதாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்து அவரை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2ம் இணைப்பு
யாழ்.குடாநாட்டில் 1996ம் ஆண்டு தொடக்கம் 2008வரையில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் சுற்றிவளைப்பு கடத்தல்களில் தங்கள் பிள்ளைகளை கடத்திச் சென்று காணாமல்போகச் செய்தவர்கள் படையினரும், ஈ.பி.டி.பியினரும், கருணா குழுவினருமே என காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பதாக மக்கள் இன்றைய தினம் சாட்சியமளித்திருக்கின்றனர்.
மேற்படி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்திற்கான முதலாம் அமர்வு இன்று யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மக்கள் மேற்படி சாட்சிகளை வழங்கியிருக்கின்றார்கள்.
மேலும் இன்றைய அமர்வில் பெறப்பட்ட 49முறைப்பாடுகளில் 4முறைப்பாடுகள் 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் வட்டுவாகல் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வைத்து படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் காணாமல்போனவர்கள் பற்றியதாகவும் ஏனைய முறைப்பாடுகள் அனைத்தும் 1996ம் ஆண்டு தொடக்கம், 2008ம் ஆண்டு வரைக்கும் குடாநாட்டில் வெள்ளைவான் கடத்தல் மற்றும், சுற்றிவளைப்பு கடத்தல் ஆகியவை பற்றியதாகவுமே அமைந்திருந்தது.
இதில் குறிப்பாக எஸ்.கனகலிங்கம் என்பவர் சாட்சியமளிக்கையில் என் மகனை 2006ம் ஆண்டு அதிகாலை 3.45 மணியளவில் படையினரின் சீருடையில் ஆயுதங்களுடன் வந்தவர்கள் கடத்திச் சென்றார்கள்.
அவர்களுடன் சிவில் உடையில் சரளமாக தமிழில் பேசியவர்களும் நின்றிருந்தார்கள் எங்கள் வீட்டு கதவை தட்டி துப்பாக்கியை எங்கள் தலைகளில் வைத்துக் கொண்டு எங்கள் பிள்ளையை கடத்திச் சென்றார்கள் என் பிள்ளை இன்றுவரையில் எங்கே என்றே தெரியவில்லை என சாட்சியமளித்;த அவர், சிவில் உடையில் ஆயுதங்களுடன் வந்து தமிழில் பேசியவர்கள் ஈ.பி.டி.பியினரே என கூறியிருக்கின்றார்.
இதேபோன்று எஸ்.உதயவதனி என்ற தாய் சாட்சியமளிக்கையில், 2006ம் ஆண்டு என் மகனை மாலை 4மணியளவில் வீட்டிற்கு வந்த வெள்ளை வாகனம் கடத்திச் சென்றது அப்போது படையினரின் சீருடையுடனும், சிவில் உடையிலும் பலர் நின்றிருந்தார்கள்.
அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தார்கள் நாங்கள் தடுத்தபோது வானத்தை நோக்கிச் சுட்டார்கள். அதன் பின்னர் எங்கள் பிள்ளையை கடத்திச் சென்றுவிட்டார்கள். அப்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தமையினால் அவர்களை பின்தொடரவும் வெளியே செல்லவும் எம்மால் முடியவில்லை.
மறுநாள் காலை நாங்கள் பார்த்தபோது வீட்டு முற்றத்திலும், கருணா குழுவினரின் பெயர் பொறிக்கப்பட்ட கடதாசி அட்டைகள்(விசிற்றிங் காட்கள்) காணப்பட்டன. என சாட்சியமளித்துள்ளார்.