யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு சாட்சியமளித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் றேகானின் (றேகா) மனைவி துளசிகா, இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் தனது கணவர் சரணடைந்த இராணுவ அதிகாரியினை அடையாளம் காட்டமுடியும் என தெரிவித்துள்ளார்.
அங்கு தனது சாட்சியத்தில்,
இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களை சரணடையுமாறு தெரிவித்து வந்தனர்.
இதன் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் நானும் எனது கணவரும் பிள்ளைகளுமாக இராணுவத்தினரிடம் சரணடைந்தோம்.
எனது கணவரைப் தனியாகவும் என்னை தனியாகவும் விசாரணை மேற்கொண்ட இராணுவத்தினர், எனது கணவரை வைத்தியர் சிவபாலன் மற்றும் விடுதலைப் புலிகளின் துணை மருத்துவப் பொறுப்பாளராக இருந்த மனோஜ் என்பவருடன் ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
நாம் தனியாக ஒமந்தைச் சோதனைச் சாவடிக்குக் கொண்டு வரப்பட்ட போது அங்கு ஒரு வாகனத்தில் எனது கணவரும் மேற்குறிப்பிட்ட இருவரும் அமர்ந்திருப்பதை நான் அவதானித்தேன். அப்போது அங்கு விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் தம்மோடு சரணடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் இராணுவத்தினர் அறிவித்தனர்.
அங்கு எனது கணவர் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு ஒரு உயரதிகாரிக்கு முன்னால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதை நான் கண்டேன். அப்போது என்னை வட்டுவாகல் பிரதேசத்தில் விசாரணை நடத்திய அதிகாரியும் எனது கணவர் அங்கே இருக்கின்றார் எனக் காட்டினார்.
எனது கணவருடன் கதைத்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரியை என்னால் அடையாளம் காட்ட முடியாது. ஆனால் வட்டுவாகலில் எனது கணவரை ஒப்படைத்த இராணுவ அதிகாரியை அடையாளம் காட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார்.
எனது கணவர் காணமற்போனதில் இருந்து நான் பல துன்பங்களை எதிர்நோக்கி வருவதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளேன். ஒரு முறை தற்கொலை முயற்சியும் மேற்கொண்டுள்ளேன்.
எனது அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் தான் நான் தற்போது வாழ்ந்து வருகின்றேன் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட நான் விரும்புகின்றேன்.
எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன் இருந்தாலும் அவரை சட்டத்திற்கு முன்பாக நிறுத்துமாறு நான் கோருகின்றேன்.
இதுவரை நான் எனது கணவர் தொடர்பில் எவரிடமும் முறைப்பாடு செய்யவில்லை.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உங்கள் முன்னால் நான் முதற்தடவையாக சாட்சியமளிக்கின்றேன். இதனால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த ஆணைக்குழு எனது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.