காணாமல் போனோர் பற்றி சர்வதேச விசாரணைக்கு கோரினேன்: ஜெனிவா சென்று திரும்பிய அனந்தி

ananthi_ezilanஇலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையின் பிரதிநிதியாக ஜெனீவாவுக்குச் சென்று திரும்பியுள்ள அந்த சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறினார்.

சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றையும் ஜெனிவாவில் உள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்களின் நிலைமைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்துடைப்பு நடவடிக்கை என்று சொல்லத்தக்க வகையிலான உள்ளுர் விசாரணைகள் என்பன தொடர்பாக விபரமாக எடுத்துக் கூறியிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வடமாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவுக்கு அமைய அதன் பிரதிநிதியாக வடமாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைமப்பின் ஏற்பாட்டில் ஜெனீவாவுக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதிப்போரின் ஒரு கண்கண்ட சாட்சியாக மட்டுமல்லாமல், இராணுவத்தினரிடம் சரணடைவதற்காகத் தனது கணவனை நேரடியாகக் கையளித்தவர்களில் ஒருவர் என்ற வகையில் அவ்வாறு தமது உறவுகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தவர்களின் பிரதிநிதியாக ஜெனிவா சென்றிருந்தாக அவர் சொன்னார்.

காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் எல்எல்ஆர்சி போன்று காலம் கடத்துவதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணைகளை இப்போது நடத்தி வருகின்றது. இந்த விசாரணைகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.

ஏனெனில் எமது உறவுகளை இராணுவத்தினரிடம் கையளித்த பின்னர் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியாத நிலையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ள எங்களுடைய வழக்கில் அரச தரப்பு சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் வாதாடுகின்ற வழக்கறிஞர் ஒருவரே காணாமல் போயுள்ளவர்கள் பற்றி விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இலட்சக்கணக்கான மக்கள் பார்த்திருக்க இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் போயிருக்கின்றார்கள். அதனை மறுத்து வாதாடுகின்ற வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட விசாரணையில் நாங்கள் நம்பிக்கை கொள்ள முடியாது.

இதற்காகவே நாங்கள் சுதந்திரமாக அச்சமின்றி சாட்சியமளிக்கத்தக்க ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம் என்று ஜெனிவாவில் சந்தித்தவர்களிடம் நான் எடுத்துக் கூறியிருக்கின்றேன்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்கள் அனுபவிக்கின்ற கஷ்ட நிலைமைகள் பற்றிய உண்மையான நிலைமைகளை ஜெனீவாவில் உள்ளவர்கள் அறிந்திருக்கவில்லை என்றும், தான் அந்த விடயங்களை எடுத்துக் கூறிய போது அவை அவர்களுக்குப் புதிதாக இருந்தன என்றும் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், வடமாகாண சபை உறுப்பினருமாகிய அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.

TAGS: