இலங்கை அரசாங்கம் ஜெனீவாவை ஏமாற்றுவது போல யாழ்ப்பாணத்தையோ, வடக்கையோ ஏமாற்ற முடியாது. இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் சாட்சியப்பதிவுக்காக நேற்று யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த உறவுகள் பலர் இவ்வாறு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனோர் தொடர்பான சாட்சியப்பதிவுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது.
அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான பதிவுகள் இடம்பெற்றன. அதன்போதே உறவுகளை தொலைத்து நிற்பவர்கள் இவ்வாறு ஆதங்கத்தை தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
நாங்கள் இப்போது ஒருவிதமான மனநோயாளிகளாக மாற்றப்பட்டுள்ளோம். உயிருடன் எங்கட உறவுகள் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாது. எல்லா இடமும் தேடி அலைந்துவிட்டோம்.
எங்கேயும் எங்கள் உறவுகள் இல்லை. பதிவுகளும் விசாரணைகளும் தான் எப்போதும் நடக்கின்றதே ஒழிய பதில் கூறுவார்கள் யாரும் இல்லை.
இனி எங்கே எங்களின் உறவுகளை தேடுவது. இந்தப் பதிவு எல்லாம் ஏமாற்று என்று தெரியும்.
இதனால் ஒரு நன்மையும் இல்லை. ஜெனீவாவில் தப்பிக்கவே இந்தப் பதிவுகள் நடக்கின்றன.
இலங்கை அரசு ஜெனீவாவை ஏமாற்றலாம் ஆனால் யாழ்ப்பாணத்தையோ வடக்கையோ ஏமாற்ற முடியாது .எங்களின் கண்ணீருக்கு பதில் கூறியே ஆகவேண்டும் என்று கதறியழுத வண்ணம் தெரிவித்தனர்.
கண்ணீர் கதை கேட்டு கண்ணீர் விட்டு அழுத மேலதிக அரச அதிபர்
காணாமல் போனோரது உறவுகள் கூறும் கண்ணீர் கதை கேட்டு மேலதிக அரச அதிபர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அதன்படி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
அதன் போது இன்று காலை சாட்சியப்பதிவுகள் மேற்கொள்ளும் இடத்திற்கு வந்திருந்த யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் காணாமல் போனவர்கள் கூறும் உண்மைக் கதைகளையும் அவர்களது கதறல்களையும் கேட்டு அவரது கண்களில் இருந்து கண்ணீர் விட்டு அழுதார்.
எனினும் அவரால் அவற்றை தாங்கிக் கொள்ள முடியாதளவில் அவர் பதிவிடத்தை விட்டு சென்றுவிட்டார்.