ஜெனீவா தீர்மானத்தை தணிக்க இலங்கை அரசு முயற்சி: த.தே.கூட்டமைப்பு

tna_registerஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையின் கடுமைத் தன்மையை தணிப்பதற்காக அல்லது நீர்த்துப் போகச் செய்வதற்காகவே இலங்கை அரசு தென்னாபிரிக்காவிற்கு தூதுக்குழுவொன்றை அனுப்பியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான முயற்சிகளில் தென்னாப்பிரிக்கா அக்கறை செலுத்தி வந்திருக்கின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார்.

கடந்த காலங்களில் தென்னாபிரிக்க அரச பிரதிநிதிகள் பல தடவைகள் இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன்னர் இலங்கை அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் தனித்தனியாக தென்னாபிரிக்கா சென்றுவந்துள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

ஆனால், இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் காட்டத் தவறியபடியாலேயே தென்னாபிரிக்காவின் ஈடுபாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த கொமன்வெல்த் மாநாட்டின்போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின் பிரகாரம் இலங்கைக்கு உதவ முன்வந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் தென்னாபிரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துச் சென்றதாக சுமந்திரன் கூறினார்.

தென்னாபிரிக்காவின் முயற்சிகளில் சந்தேகமா?

ஆனால், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்று வரவுள்ள சூழ்நிலையில், ‘இன்னொரு நாடொன்றின் அனுசரணையுடன் நல்லிணக்க முயற்சிகள் நடப்பதாக சர்வதேசத்துக்கு காட்டும் முயற்சியாகவே’ தென்னாபிரிக்காவுக்கு அரச தூதுக்குழு சென்றுள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். ெ

எனினும் தென்னாபிரிக்காவின் பங்களிப்புடன் நடக்கும் இணக்க முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீணாக்குகிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், தென்னாப்பிரிக்கா ஊடான முயற்சிகளில் நன்மை உள்ளவரை அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

ஆனால், சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவற்றுக்கு தமது கட்சி ஒத்துழைப்பு வழங்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார்.

இதேவேளை, இலங்கை அரசின் தென்னாப்பிரிக்கப் பயணத்தை ‘ஜெனீவா தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி’ என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்காவின் பங்களிப்பையும் சந்தேகிக்கிறதா? – என்று தமிழோசை வினவியது.

அதற்குப் பதிலளித்த சுமந்திரன், ‘நாங்கள் அப்படிச் சொல்லவில்லை, இலங்கை அரசாங்கத்தையே விமர்சிக்கின்றோமே தவிர, தென்னாபிரிக்காவை அல்ல’ என்று கூறினார்.

எதிர்காலத்தில் தென்னாபிரிக்கா உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச நாடோ அல்லது ஐநா உள்ளிட்ட அமைப்புகளோ இலங்கையின் இனப்பிரச்சனையைத் தீர்க்க முன்வந்தால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளத் தயார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

TAGS: