இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள புதிய தகவல்

mahinda_sarath_001போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ஷவினர் பொறுப்புக் கூறவேண்டும் என இதற்கு முன்னர் தெரிவித்து வந்த சரத் பொன்சேகா தற்பொழுது அதற்கு முரணான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் ராஜபக்ஷவின் போர் நிறுத்தம் ஒன்றுக்கு செல்லுமாறு கூறியதாகவும் அதனை தான் மறுத்து போரை தொடர்ந்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கிரிபத்கொட மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ம் ஆண்டின் முதல் நான்கரை மாதங்களே போரின் உச்சக்கட்ட சந்தர்ப்பமாக இருந்தது. கடுமையாக போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஐரோப்பாவின் அழுத்தங்கள் காரணமாக ஆட்சியாளர்கள் என்னை போர் நிறுத்திற்கு செல்லுமாறு கூறினர்.

பிரபாகரன் தப்பிச் செல்ல அது சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்பதால் அதனை நான் மறுத்தேன். அத்துடன் போர்க் களத்தில் இருந்த படையினரும் அதனை எதிர்த்தனர்.

ஆட்சியாளர்களின் அழுத்தங்கள் காரணமாக நாங்கள் சற்று பின்வாங்கினோம். 2009ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தின விழாவுக்கு என்னையும் அழைத்தனர்.

அதிகாலையில் குளித்து விட்டு நானும் சுதந்திர தின நிகழ்வுக்கு சென்றேன். எமது பின் வாங்கல் காரணமாக புலிகள் பலமடைந்து வந்தனர்.

ஆட்சியாளர் சுதந்திர தின விழாவில் பிதற்றி கொண்டிருந்த போது போர்க்களத்தில் ஏற்பட்டு வரும் நிலைமை தொடர்பில் நான் கடும் குழப்பத்தில் இருந்தேன்.

எனினும் பின்னர் விமானப்படை, கடற்படை மற்றும் தரைப்படை வீரர்களின் பெரும் அர்ப்பணிப்பிற்கு மத்தியில் நாங்கள் போரில் வெற்றிப் பெற்றோம்.

ஆட்சியாளர்கள் கூறியதை கேட்டு நாங்கள் அன்று மூன்று கிலோ மீற்றர் தூரம் பின்வாங்கியிருந்தால். புலிகளின் தலைவர்கள் தப்பிச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

ஆயிரக்கணக்கான படையினரால் போரில் வெல்ல முடிந்தது. திருட்டுத் தனமான அரசியல்வாதிகளால் போரில் வெல்லவில்லை என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

TAGS: