சீனாவின் 21-ம் நூற்றாண்டுத் திட்டமான நவீன கடல் மார்க்க பட்டுப்பாதைத் திட்டத்திற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்று அண்மையில் சீனா சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உறுதியளித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், இலங்கையுடன் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுக்களுக்காக சீனத் தூதுக்குழுவொன்று இலங்கை சென்றுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக- பொருளாதார ஒத்துழைப்புகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை இருதரப்பும் எடுத்துள்ளன.
இலங்கையில் ஏற்கனவே துறைமுகங்கள், சர்வதேச விமான நிலையம், அனல் மின்நிலையம், பெருந்தெருக்கள், ஹோட்டல்கள் என பல்வேறு உட்கட்டமைப்பு கட்டுமானங்கள் சீனாவின் முதலீட்டில் நடந்துள்ளன.
எனினும் சீனாவின் முதலீடுகள் நேரடி வர்த்தக – இருதரப்பு கொடுக்கல் வாங்கலாக இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையின் முக்கிய இறக்குமதி மூலாதாரமாக விளங்குகின்ற சீனா, இலங்கைக்கு பெரிய ஏற்றுமதி சந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்ற காரணத்தினால் நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கக் கூடிய விதத்தில் சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் அமைந்தால் மட்டுமே இலங்கைக்கு நன்மை நிலையான பொருளாதார நன்மைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அரசியல் நன்மைகள்
சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இந்திய சந்தையைக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி மு. கணேசமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் மோட்டார் கார் ஏற்றுமதியில் இலங்கை முக்கிய சந்தையாகத் திகழ்கிறது. எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சீன- இலங்கை சுதந்திர வர்த்தக உறவுகள் மூலம் இந்தியாவின் சந்தை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
சீனாவைப் பொருத்தவரை, இலங்கையுடனான பொருளாதார உறவுகள் மூலம் அந்நாட்டிற்கு கிடைக்கும் அரசியல் நன்மைகளே அதிகம் என்றும் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
சீனாவின் புதிய அதிபரின் சிந்தனையின்படி, 21-ம் நூற்றாண்டின் நவீன கடல்மார்க்க பட்டுப்பாதையை கட்டியெழுப்பும் திட்டத்துக்காக சீனா அண்டை நாடுகளிடம் உதவி கோருகின்றது.
அதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்குமா என்று இன்னும் தெரியவில்லை. இலங்கை ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலும் இலங்கையிலும் சீனா துறைமுகங்களை கட்டிக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் போது, சீனா இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.