காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடுநிலைமை தொடர்பில் அனந்தி கேள்வி!

anandhi-04காணாமல் போனோர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்திருந்த வழக்கில், அரசாங்கத் தரப்பில் வாதாடிய சட்டத்தரணி ஒருவர், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருக்கிறார்.

இந்த நிலையில் அந்த ஆணைக்குழு தாக்கல் செய்யும் அறிக்கை எந்த வகையில் நடுநிலைமையானதாக அமையப் போகிறது ? என்று, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணாமல் போனவர்களுக்கும், அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவதைப் போல பாரிய அளவில் யாரும் காணாமல் போகவில்லை என்றும் குறித்த சட்டத்தரணி வாதிட்டிருந்தார்.

இலட்சக்கணக்கானோர் முன்னிலையில் உறவினர்களை இராணுவத்தினரிடம் நாங்கள் ஒப்படைத்ததை இல்லை என்று வாதாடிய அரச சட்டத்தரணியான அவர் எவ்வாறு ஆணைக்குழுவின் விசாரணைகளை நடுநிலை படுத்துவார்? என்றும் அனந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமன்றி ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை கிளிநொச்சி கச்சேரியில் இடம்பெற்ற பொழுது இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று விசாரணைக்கு வாருங்கள் என்று இலக்கத் துண்டுகளை வழங்கியுள்ளனர். நீங்கள் யார் என்று மக்கள் வினவிய போது நாங்களும் ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் தான் என்று கூறியுள்ளார்கள்.

இராணுவத்தினர் அழைத்துச் சென்ற மக்களுக்கு காணாமற்போனோரின் மரணச்சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.  இவ்வாறு அங்கு ஏழு பேருக்கு மரணச் சான்றிதழ் வழங்கியுள்ளதுடன், ஒரு இலட்சம் ரூபா காசோலையும் வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

இதேபோன்று மேலும் 400 பேருக்கு அதிகமான மக்களுக்கு காணாமற்போனோர் தொடர்பில் மரணச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, கரைச்சி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர்  போன்றோருக்கும் இந்த விடயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

அதனால்தான் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை என்று நாங்கள் தெரிவிக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் தாம் ஜெனீவா சென்றிருந்த வேளையில் சர்வதேச இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: