ஐ.நாவில் இரகசிய வாக்கெடுப்பு தேவை! இல்லையேல் அமெரிக்கா அச்சுறுத்தும்: ஆங்கில இதழ்

un_america_001எதிர்வரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு நாட்டுக்கு எதிரான பிரேரணைகளின் போது வாக்களிப்புக்களை இரகசியமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை ஆங்கில இதழ் ஒன்று வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொண்டு வரவுள்ள. இதற்காக அந்த நாடுகள் ஏனைய உறுப்பு நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றன.

இந்த விடயத்தில் இரண்டு நாடுகளினதும் பொருளாதார மற்றும் வல்லரசுத் தன்மைகள் தாக்கத்தை ஏற்படுத்தி நிற்கின்றன.

குறிப்பாக ரஸ்யா, சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கப் போவதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளன. எனினும் ஏனைய சிறிய நாடுகள் வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை வெளியிடுவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றன.

குறிப்பாக சில நாடுகளை அமெரிக்கா அச்சுறுத்தி தமது பக்கம் வாக்களிக்க வைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

ஜெனீவாவில் உள்ள சில இராஜதந்திர தரப்புக்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக அந்த நாடுகள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியில் அமெரிக்காவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்ற.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் போது ஆதரவு மற்றும் எதிர்ப்பு நாடுகள் என்ற விடயம் தெளிவாக தெரியவரும்.

எனவே இதனை தவிர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை இனிவரும் காலங்களில் இரகசிய வாக்கெடுப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆங்கில இதழ் கோரியுள்ளது.

அதேநேரம் இலங்கையும் தொடர்ந்தும் சர்வதேச ரீதியில் இவ்வாறான தோற்றப்பாட்டை உருவாக்குவதை தவிர்க்கும் முகமாக நல்லிணக்க விடயத்தில் தமது முன்னேற்றத்தை காட்ட முன்வரவேண்டும் என்றும் ஆங்கில இதழ் கேட்டுள்ளது.

TAGS: