இலங்கையின் வெளிநாட்டு கொள்கை பாதுகாப்பு அமைச்சினால் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக ஏற்பட்டுள்ள அழுத்தங்களை வெல்ல முடியாது என்று இலங்கையின் முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இருந்த காலத்தில் இலங்கையின் வெளியுறவுக்கொள்கையினால் ஏற்பட்ட அனுகூலங்கள் இனிமேல் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு லக்ஷ்மன் கதிர்காமர் ஒருபோதும் இடம் தரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணை நீதியற்றது. மறுமுனையில் அந்த நிலைமை ஏற்படுவதற்கு இலங்கையும் காரணமாக அமைந்திருக்கிறது என்று தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் லக்ஷ்மன் கதிர்காமர் வெளியுறவு அமைச்சராக இருந்திருந்தால், சர்வதேசத்தில் இலங்கைக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை இருந்திருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய வெளியுறவு அமைச்சும் அதன் அதிகாரிகளும் வெளியுறவுக்கொள்கைப்பற்றி தெரியாதவர்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னர் ஜனாதிபதியின் ஆலோசகர்கர்களாக பிரட்மன் வீரக்கோன் போன்றவர்கள் இருந்தனர். ஆனால் இன்று அனுபவமேயில்லாத சஜின் வாஸ் குணவர்த்தன போன்றவர்கள் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக உள்ளனர்.
இந்தநிலையில் தற்போது இலங்கை மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் உள்ளது.
ஜெனிவாவில் கொண்டு வரப்படும் போர்க்குற்றப் பிரேரணையின் போது இலங்கை கடந்த ஐந்து வருடங்களில் மேலும் 12 வாக்குகளை இழக்கப்போகிறது.
இது ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தும். இது இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட சூழ்நிலையாகும்.
இதேவேளை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால், இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் இருந்து மீண்டும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் சென்று விடும். எனவே எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு பின்னர் இலங்கைக்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலையே ஏற்படும் என்று தாம் நம்புவதாக தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.