மன்னாரில் மீட்கப்பட்ட 80 மனித எச்சங்கள் தொடர்பில் பரிசோதனைகள் அவசியம்!- மருத்துவ அதிகாரி வைத்தியரட்ன

mannar_mass_graveமன்னார் திருக்கேதீஸ்வரத்தில் தோண்டப்பட்டு வரும் மனித புதைகுழியில் இருந்து இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவைகுறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அநுராதபுரம் நீதிமன்ற மருத்துவ அதிகாரி தனஞ்செய வைத்தியரட்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை மீட்கப்பட்ட 80 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் யாவும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவ அதிகாரி தனஞ்செய வைத்தியரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தோண்டப்பட்ட குழியில் இருந்து பெண்கள் மற்றும் சிறுவர்களின் எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை கண்டுபிடிக்க மேலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வைத்தியரட்ன குறிப்பிட்டார்.

2009 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக கூறப்படுவதன் பின்னர் தோண்டப்படும் பாரிய மனித புதைகுழி இது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: