படைக்கலைப்போ, படைக்குறைப்போ ஒருபோதும் நடக்காது – கொதிக்கிறார் கோத்தாபய

gotabhaya-rajapakseஎந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்கா அரசாங்கம், இராணுவத்தில் படைக்கலைப்பைச் செய்யவோ, வடக்கு மாகாணத்தில் இராணுவத் தலையீட்டைக் குறைக்கவோமாட்டாது என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி, சிறிலங்கா இராணுவத்தில் படைக்கலைப்பைச் செய்யுமாறு இராஜதந்திர முனையில் அழுத்தங்களைக் கொடுத்தாலும், அது மட்டும் நடக்காது என்று அவர் கூறியுள்ளார்.

“அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த கொழும்பிலுள்ள நோர்வே மற்றும் பிரித்தானிய தூதுவர்கள், சிறிலங்கா இராணுவத்தில் படைக்கலைப்புச் செய்வது சாத்தியமா என்று யாழ்.படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் அவர்களின் திட்டத்தின்படி, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூட, படைக்கலைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பெரியளவிலான படைக்கலைப்பு, ஒரு பெரிய சமூக எழுச்சியை ஏற்படுத்தும்” என்று கோத்தாபய ராஜபக்ச கடும் கோபத்துடன் கூறியுள்ளார்.

“எந்தவொரு விவேகமுள்ள அரசாங்கமும், போர்க்களத்தில் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய படையினரை வீட்டுக்கு அனுப்புமா?

படைக்கலைப்பு நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தும்.

அரசியல் கொந்தளிப்பையும், சமூக பொருளாதார உறுதியற்ற நிலையையும் உருவாக்கும்.

ஒருவேளை, படையினரை வீட்டுக்கு அனுப்ப வைத்து, மிகப்பெரிய நெருக்கடிக்குள் எம்மைச் சிக்க வைக்கலாம் என்று, விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

போருக்குப் பிந்திய மீட்புத் திட்டங்களில் ஆயுதப்படைகள் பணியாற்றுகின்றன. அவர்களினால் எல்லா சமூகங்களும் பயனடைகின்றன.

பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் சிறிலங்கா அரசாங்கம் செய்யாது.

அமெரிக்கா தனக்கு நெருக்கமான கூட்டாளி நாடுகளின் பாதுகாப்புக் குறித்து மட்டுமே கரிசனை கொள்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் இராணுவத் தலையீடுகள் குறைக்கப்பட்டது குறித்து அமெரிக்கா நன்றாகவே அறியும்.

ஆனாலும், வடக்கு மாகாணத்தில் போர்க்காலத்தில் உள்ளது போன்று படையினர் நிலைகொண்டுள்ளது போன்று கருத்துகளை வெளியிடுகிறது.

தமது குடிமக்களினதும், கூட்டாளி நாடுகளினதும் பாதுகாப்புக்காக அமெரிக்கா தனது படைகளை தனது நாட்டு எல்லைகளுக்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணையும் முயற்சிகளை மேற்கொள்ளமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, எமது படையினரை நாம் நிறுத்தி வைத்துள்ளதை, மட்டும் அவர்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

TAGS: