போர்க்குற்றம் தொடர்பில் புதிய சாட்சியத்தை ABC வெளியிட்டது

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய தேசியத் தொலைக் காட்சியான ஏ.பி.சி. நேற்று முன்தினம் புதிய சாட்சியத்தை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டிற்கு பயணம் செய்யவுள்ள நிலையில் இச்செய்தி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இச் செய்தியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்ற திருமதி மீனா கிருஷ்ணமூர்த்தியின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போதான அனுபவங்களை திருமதி மீனா கிருஷ்ணமூர்த்தி தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

படையினர் மருத்துவமனைகளை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்தும் கடற்படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்கள் தொடர்பிலும் அவர் தனது சாட்சியத்தில் பதிவு செய்துள்ளார்.

சுமார் 9 நிமிடம் ஒளிபரப்பப்பட்ட இச் செய்தியில் ஆஸ்திரேலியாவில் மூன்று பேருக்கு எதிராக போர்க்குற்ற வழக்கு தொடுக்க திருமதி மீனா கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து மருத்துவர் சாம்பவியும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதியும், தற்போதைய ஆஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றுகின்ற அட்மிரல் திஸார சமரசிங்க, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமை பெற்ற ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித்த ஹோகன்ன மற்றும் பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள மகிந்த ராஜபக்சே‌ ஆகியோருக்கு எதிராக திருமதி மீனா கிருஷ்ண மூர்த்தி ஆஸ்திரேலிய சமஷ்டி காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள ஆஸ்திரேலிய சமஷ்டி காவல்துறை இம் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் தேசியத் தொலைக்காட்சியான ஏ.பி.சி. நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது, அரச படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே மீது போர்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் தேசியத் தொலைக்காட்சி இச் செய்தியை வெளியிட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கை அரசாங்கத்தை இடை நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGS: