ஜெனிவா தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் – ஜான் கெரி

john_kerry_usஇலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்துக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜான் கெரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசுத்துறையின் 2013 ஆம் ஆண்டுக்கான உலக மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”உலக உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் மக்களின் சார்பில் அமெரிக்கா என்றும், எந்தவிதமான தயக்கமும் இன்றி தொடர்ந்து பேசும். தமது உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியாமல் தவிக்கும் மக்களுக்காக பல சந்தர்ப்பங்களில் நாங்கள் குரல் கொடுத்து வந்துள்ளோம்.” என்று கூறிய அமெரிக்க அரசுத்துறைச் செயலர், அது இலங்கைக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் இன்னமும் உரிய பதிலை அளிக்காமல் இருக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இலங்கையில் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் வருத்தத்துக்குரிய வகையில் இன்னமும் தொடருகின்றன என்று குறிப்பிட்ட ஜான் கெரி அவர்கள், இந்த நிலைமைகள் குறித்த தமது தொடர்ச்சியான கவலைகள் காரணமாக அமெரிக்கா மார்ச் மாதம் வரவிருக்கும் இலங்கைக்கு எதிரான மற்றுமொரு ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானத்தை ஆதரிக்கவுள்ளது என்றும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி கருத்து

செய்தியாளர்களுடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 

செய்தியாளர்களுடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

 

இதேவேளை, ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக எந்தவிதமான தீர்மானம் வந்தாலும் தாம் அதனை ஏற்கமாட்டோம் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களை சந்தித்த அவர், போருக்குப் பின்னரான மீள் கட்டுமானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் தமது அரசு தம்மால் ஆன அனைத்தையும் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு, அங்கு வரவிருக்கும் தேர்தல் ஒரு அழுத்தத்தை கொடுக்கக் கூடிய நிலை இருப்பதை தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்திய மீனவர்கள் எந்த நிலையிலும், இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடிக்க தாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். -BBC

TAGS: