இலங்கை அரசின் பதிலறிக்கையின் படி நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் திருத்தங்கள்!- ஆங்கில ஊடகம்

balachandran_03இலங்கை  அரசாங்கத்தின் பதில் அறிக்கையின் படி, நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னர் வெளியிடப்பட்ட வரைபில் இருந்த பல பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சமர்ப்பிக்கப்படவுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் வரைபு ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு அதன் பதிலை பெற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர், இந்த அறிக்கையின் வரைவு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்தநிலையிலேயே, நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் இறுதி வரைபில், முன்னர் வெளியிடப்பட்ட வரைபில் இருந்த பல பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையான, முல்லைத்தீவுக் கரையோரத்தை நோக்கி இலங்கைப் படையினர் முன்னேறிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார் என்ற வசனத்தில், ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் பதில் அறிக்கையின் படி, நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதில் வடக்கில் படைக்குறைப்புத் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் வெளியிட்ட பதிலின் அடிப்படையில் புதிய பந்தி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் வாழ்வில் தலையீடுகளைத் தவிர்க்கும் வகையில், படைக்கலைப்பு மற்றும் ஆயுதக் களைவுக்கு தெளிவான கால எல்லை ஒன்றை வகுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு குறித்தும் இந்த அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது இறைமையுள்ள அரசாங்கம் ஒன்றின் உரிமையை மீறுவதாக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

TAGS: