அமெரிக்காவின் தீர்மானத்தை சந்திக்க தயார் என இலங்கை அறிவிப்பு

usa_indian flagஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் அமெரிக்க கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை சந்திக்க தயாராக இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய மாநாடு ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் நேற்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை மற்றும் இங்கிலாந்து, கனடா நாட்டு வெளியுறவு மந்திரிகள் ஆகியோர் இலங்கை தொடர்பான தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.

நவிபிள்ளை தனது சமீபத்திய அறிக்கையில்,

இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் அதனை இலங்கை நிராகரித்தது.

மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர இருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மனித உரிமைகள் தொடர்பான மெத்தன நடவடிக்கைகள், தமிழர் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளில் தாமதம் ஆகியவை காரணமாக 3-வதாக ஒரு தீர்மானம் ஐ.நா. மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சவின் செய்தி தொடர்பாளர் மொஹான் சமரநாயக்க கூறும்போது,

ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தீர்மானத்தை சந்திக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. நாங்கள் இதில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார்.

ஏற்கனவே இதற்கு முந்தைய காலத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்த 2 தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது.

இலங்கை அதிபர் ராஜபக்ச கடந்த வாரம் கூறும்போது,

அண்டை நாடான இந்தியாவில் தேர்தல் நடைபெறும் ஆண்டு என்பதால், தமிழ்நாட்டின் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்தியா தீர்மானத்தை ஆதரிக்க கூடும் என்றார்.

மியான்மரில் நடைபெற இருக்கும் வங்க கடல் நாடுகள் (பிம்ஸ்டெக்) உச்சி மாநாட்டுக்கு நேற்று இலங்கை அதிபர் ராஜபக்ச புறப்பட்டு சென்றார். அங்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

கடந்த ஆண்டு நவம்பரில் கொழும்பில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டை மன்மோகன் சிங் புறக்கணித்த பின்னர் இப்போது முதல்முறையாக ராஜபக்சேவை சந்தித்து பேச இருக்கிறார்.

7 உறுப்பு நாடுகளை கொண்ட பிம்ஸ்டெக்கில் இந்தியா மட்டுமே ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: