ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை முன்வரைவு, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றிவிட்டதாக இலங்கையில் அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்திவரும் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
பாரதூரமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் நோக்குடன் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
போர்க்கால குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை கோரப்படும் என்று சர்வதேச சமூகம் முன்னெடுத்துவந்த பிரச்சாரங்கள் பொய்த்துப் போயிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கொழும்பில் இன்று புதன்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சர்வதேச சமூகம் விரும்புகிறதே ஒழிய, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கமே அதற்கு இல்லை என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், காணாமல்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் அரசியல் கைதிகளுக்கும் குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களுக்கும் நீதி வழங்க சர்வதேச சமூகம் தவறிவிட்டதாகக் கூறினார்.
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசாங்கம் தொடர்வதற்கு சாதகமாகவே அமெரிக்காவின் முன்னெடுப்பில் தீர்மான வரைவு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
‘நவி பிள்ளை வரம்பு மீறிவிட்டார்’: இலங்கை
சர்வதேச விசாரணை என்ற அமெரிக்காவின் முன்னெடுப்புகளுக்கு என்ன ஆனது?: தமிழ்த் தலைவர்கள் கேள்வி
இதற்கிடையே, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 25-வது அமர்வில் இன்று உரையாற்றிய இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று கடந்த மாதம் கூறிய மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையின் அறிக்கையை கடிந்து பேசினார்.
இலங்கையில் கடந்த 12 மாதங்களில் நல்லிணக்க நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காணாமல்போனவர்கள் பற்றி ஜனாதிபதி ஆணைக்குழு விசாரித்துவருவதாகவும் ஜீ.எல் பீரிஸ் இங்கு கூறினார்.
கடந்த 30 ஆண்டுகால போர்க்கால இழப்புகள் பற்றி கணக்கெடுப்பு நடந்துள்ளதாகவும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 75 ஆயிரம் முஸ்லிம்களை மீள குடியமர்த்தும் வேலைகள் நடந்துவருவதாகவும் வெளியுறவு அமைச்சர் ஐநா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார்.
முன்னாள் போர்ப் பிரதேசங்களிலிருந்து இராணுவம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும் மக்களின் சிவில் வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீடுகள் எதுவும் இல்லை என்றும் இலங்கை அமைச்சர் ஐநாவில் கூறினார்.
இனப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பங்கெடுக்க மறுத்துவருவதாகவும் கூறிய ஜீ.எல் பீரிஸ், வடக்குப் பிரதேசங்களில் இன விகிதாசாரத்தை சிதைக்கும் முயற்சிகள் நடப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களையும் மறுத்துப் பேசினார்.
சர்வதேச விசாரணை கோரிக்கை சமூகங்களை மேலும் பிளவு படுத்தும்: ஜீ.எல். பீரிஸ்
‘ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அண்மைய அறிக்கை, அவருக்குள்ள ஆணை- அதிகாரங்களுக்கு அப்பால் சென்றுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள பல பரிந்துரைகள் ஒருதலைப்பட்சமானதும் அநாவசியமாக மூக்கை நுழைப்பதும் அரசியல் நோக்கம் கொண்டதுமான பரிந்துரைகளாக உள்ளன’ என்றார் ஜீ.எல்.பீரிஸ்.
நவி பிள்ளை அம்மையாரின் அறிக்கை இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்றும் சமூகங்களை மேலும் பிளவுபடுத்தும் என்றும் இலங்கை அமைச்சர் ஐநாவில் இன்று கூறிமுடித்தார்.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் இல்லை என்ற காரணத்தினால் இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு இலங்கை சென்று திரும்பிய ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி. பிள்ளை கோரியிருந்தார். -BBC