வெள்ளைக் கொடிகளுடன் வந்த நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் கொலை செய்யப்பட்டமைக்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன

nadesan_pulithevanவிடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களான ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரும் கேணல் ரமேஸ் ஆகியோர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த வேளையில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான மேலும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அவுஸ்திரேலியாவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று கடந்த மாதம் விடுத்திருந்த இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைக் கொடிகளுடன் வந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட தினத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் இதற்கான ஆதாரங்களை முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவராவார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சரணடைய விருப்பதாக செய்மதி தொலைபேசியின் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் அதனை உறுதி செய்வதற்காக குறித்த பாதுகாப்பு அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதன் போது அவர் கைது செய்யப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்துள்ளனர்.

இதன் போது அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு மற்றுமொரு சாட்சியாக அதே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவரும் ஆதாரங்களை வழங்கி இருக்கிறார்.

புலித்தேவன் ரமேஸ் மற்றும் ப.நடேசன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர் துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் அவர்களின் சடலங்களை குறித்த ஆசிரியர் நேரில் கண்டதாக தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் தம்மை ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது தாம் இந்த காட்சிகளை கண்ணுற்றதாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார் என அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனம் வெளியிட்டுள்ள இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: