ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் நகல் வடிவம் மிகவும் வலுவானதாக இறுதி வடிவம் பெற சம்பந்தப்பட்ட நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் பேச்சு நடத்தவுள்ளது.
அத்துடன் குறித்த பிரேரணையில் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் காணி சுவீகரிப்பு உட்பட இராணுவ ஆக்கிரமிப்புகளும் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிற்பகல் 2.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோரைத் தவிர கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஜெனீவாப் பிரேரணை தொடர்பில் வெளிநாடுகளுடன் பேச்சு நடத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சென்றபடியால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது.
ஐ.நா. விசாரணையைக் கோரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரேரணையின் நகல் வடிவத்தை ஆரம்பத்திலேயே குழப்பகரமானது என்று சொல்லி இதனை ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டோர் கண்டபடி விமர்சிப்பது வருந்தத்தக்கது என்றும் இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உத்தியோகபூர்வ பிரேரணை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் இருக்கின்றது.
தற்போது அங்கத்துவ நாடுகளிடம் வழங்கப்பட்டுள்ளது பிரேரணையின் நகல் வடிவமே. இந்த நகல் வடிவம் கடந்த காலங்களை விட வலுவானதாக இருக்கிறது.
இதனை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் பேச்சு நடத்தவுள்ளது” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இதன்போது தெரிவித்தனர்.
இந்தப் பிரேரணையில் இலங்கை மீது சர்வதேச விசாரணை என்ற சொல் வெளிப்படையாக இருக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட நாடுகளின் முக்கியஸ்தர்களிடம் கூட்டமைப்பு எடுத்துரைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து சர்வதேச விசாரணையைக் கோரும் வலுவான பிரேரணையை இம்முறை கொண்டு வரவேண்டும் என்று கூட்டமைப்பு இந்தியாவிடம் நேரில் வலியுறுத்தத் தீர்மானித்துள்ளது என்றும், இந்தியாவின் உயர்மட்டக் குழுவினரை சந்திப்பதற்கு டில்லியிலிருந்து அழைப்புக் கிடைத்ததும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் தலைமையில் குழுவொன்று அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளது என்றும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரேரணை நகல் வடிவத்தை நீர்த்துப் போகச் செய்ய இந்தியா முயற்சிக்கக்கூடாது என்றும் இந்திய உயர்மட்டக் குழுவினரை கூட்டமைப்பு நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.