இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யப் போவதில்லை என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கும், நன்னீர் மீன்பிடிதொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு வள்ளங்கள் வழங்குவதற்காகவும் அமைச்சர் வருகை தந்திருந்தார்.
“இந்தியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இந்திய தரப்பினர் ஒரு மாத காலத்திற்க எல்லை தாண்டி மீன்பிடிக்க வரமாட்டோம் என்று உறுதியளித்திருந்தார்கள். அந்த உறுதிமொழியை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் சட்டத்திற்கமைவாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் தெளிவாக அவர்களுககுக் கூறியிருந்தோம். அந்த உறுதி மொழியை மீறி வருபவர்கள் இப்போது கைது செய்யப்படுகின்றார்கள். அவர்கள் தொடர்பில் நீதிமன்றம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். எல்லை மீறுபவர்களைக் கைது செய்வது தொடர்ந்து நடக்கும். அதேநேரம் தமிழக முதல்வர் கோரியிருப்பதைப் போன்று கொழும்பு பேச்சுவார்த்தைக்கு முன்னர் அவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள்.” என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
பேச்சுக்களின்படி ஒப்பந்தத்தை இந்திய மீனவர்களே மீறியிருக்ன்றார்கள். இருப்பினும் பேச்சுக்களுக்கு நாங்கள் தயாராக இருககின்றோம். அவர்கள் விரும்பினால் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
புதிதாக மீனவர்கள் கைது
இதற்கிடையில் தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றிரவு 3 படகுகளில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த 15 இந்திய மீனவர்களையும், இன்று காலை 2 படகுகளி;ல் வந்து மீன்பிடித்த 9 இந்திய மீனவர்களுமாக 24 இந்திய மீனவர்கள் 5 படகுகளுடன் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 15 பேரை வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.
காவல்துறையின் பொறுப்பில் உள்ள 9 இந்திய மீனவர்களும் வெள்ளியன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்ற காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். -BBC