போர் தொடர்பில் விசாரணை நடத்த இலங்கை மக்களுக்கே உரிமையுண்டு! – மஹிந்த ராஜபக்ச

mahinda-rajapaksaதமக்கு தேவையேற்பட்டால் இலங்கையில் போர் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் முடியாது.

இலங்கை மக்களுக்கு இவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளமுடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில்  இன்று  ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், நாட்டில் நல்லது கெட்டது என்பன தொடர்பில் இலங்கை மக்களே முடிவெடுக்க வேண்டும். அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் மேற்கொள்ள முடியாது.

இலங்கையின் போர் தொடர்பில் மக்கள் விரும்பினால் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

எனினும் சர்வதேச அழுத்தங்களுக்கு பயந்து அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை வாக்கெடுப்புக்கு தயாராகி வரும் நிலையிலேயே ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

மேற்குலகத்தவர்களுக்கு அடிபணியப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ச

எந்தவொரு காரணத்திற்காகவும் மேற்குலகத்தவர்களுக்கு அடிபணியப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன விடயங்களை, ஜெனீவாவில் பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர்.

சர்வதேச சமூகமும், எதிர்க்கட்சிகளும் போரில் கிடைக்காதவற்றை பெற்றுக்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

போரின் பின்னர் நாட்டில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தியை தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகளும், சர்வதேச சக்திகளும் நாட்டுக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன என ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

TAGS: