“பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். யாரும் எவருக்கும் அடிமையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” இவ்வாறு இலங்கை மகிந்த ராஜபக்சே மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தினை மக்களிடம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜபக்சே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பிற்கு பயணம் செய்த ராஜபக்சே நேற்று நீர்வழங்கல் திட்டத்திற்கான நினைவுப் படிக்கல்லை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் நீர்வழங்கல் திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி. முரளிதரன் (கருணா), சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் நிருபமா ராஜபக்சே உட்பட பலர் கலந்துகொண்டனர்.
“இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளிபோது அன்றைய புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணா அம்மானும் முன்னாள் பிரதமர் ரணிலும் பேச்சு வார்த்தைகளை நடத்திய முக்கியமான பிரதேசத்திற்கு நான் இன்று வருகை தந்திருக்கின்றேன். இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடனும் வாழ்வாதார மேம்பாட்டுடனும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். மக்கள் தொடர்ந்தும் அடிமைகளாக இருப்பதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்” என்று இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சே மேலும் கூறினார்.