‘தீர்மானத்திற்கு ஆதரவான நாடுகளின் கருத்தே அவையில் மேலோங்கி இருந்தது’
இலங்கை தொடர்பான விசாரணைக்கான பொறுப்பை ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையிடம் ஒப்படைக்கும்போது, எந்தவிதமான பொறிமுறையை உருவாக்க முடியும் என்பது தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற விவாதங்களில் ஆராயப்பட்டுள்ளது.
உறுப்பு நாடுகளுக்கிடையில் கடந்த வெள்ளியன்று நடந்த அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இன்று இந்த விவாதங்கள் நடந்துள்ளன.
இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இலங்கை மீது விசாரணை நடத்துவதற்கு ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையருக்கு அதிகாரங்கள் இல்லை என்றும் அதற்காக ஆணையத்திடம் நிதிவளம் இல்லை என்றும் வாதிட்டுள்ளன.
எனினும், நவி பிள்ளையின் அறிக்கை இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்துகின்ற நிலையில், அந்த விதமான ஏற்பாடுகள் புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் வாதிட்டுள்ளன.
‘கால அவகாசம் ஆதாரங்களை அழித்துவிடும்’
ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் விசாரணை நடத்துவதற்கான பொறிமுறை பற்றிய ஏற்பாடுகள் புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்படலாம்
இலங்கைக்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட்டுவிட்டது, மேலும் அவகாசம் கொடுப்பது போர்க்குற்ற ஆதாரங்களை அழித்துவிடுவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அங்கு சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கா கொண்டுவந்திருக்கின்ற தீர்மானத்தை ஆதரிக்கின்ற மற்றும் அந்தத் தீர்மானத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று கோருகின்ற நாடுகளின் கருத்துக்களே சபையில் மேலோங்கி இருந்ததாக இலங்கையிலிருந்து ஜெனீவா பேச்சுக்களுக்காக சென்றுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பிபிசியிடம் கூறினர்.
இலங்கை மீதான தீர்மானம் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியத்தையே இன்று வெளிப்பட்டக் கருத்துக்கள் உணர்த்தியதாக மன்னாரிலிருந்து ஜெனீவாவுக்கு வந்திருந்த அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை வலியுறுத்திய சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை புதிய தீர்மானத்தில் வெளிப்படையாக இடம்பெறக் கூடிய வாய்ப்பு இல்லை என்றும் அருட்தந்தை ஜெயபாலன் கூறினார்.
அதேவேளை, இலங்கை மீதான விசாரணையை ஐநா மனித உரிமைகள் பேரவையின் தலைமைப் பீடம் மேற்கொள்ளத் தேவையான பொறிமுறை ஒன்றை சுட்டிக்காட்டக்கூடிய விதத்தில் இம்முறை தீர்மானம் அமையும் என்று எதிர்பார்ப்பதாக மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்ணான்டோ பிபிசியிடம் கூறினார். -BBC