சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் வலுப்பெறும் அறிகுறி

un sri lankaசிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையம் எத்தகைய விசாரணைப் பொறிமுறையையை உருவாக்கலாம் என்பது தொடர்பாக நேற்று ஜெனிவாவில் ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக நடைபெற்ற, முறைசாரா கலந்துரையாடலின் போதே இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளும் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இந்த விவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது, சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும்,பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், சிறிலங்கா தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கு அதிகாரங்கள் இல்லை என்றும், அதற்காக ஆணையத்திடம் நிதிவளம் இல்லை என்றும் வாதிட்டுள்ளன.

ஆனால், நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், சிறிலங்காவில் நடந்துள்ள மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான ஏற்பாடுகள் புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தின.

அதேவேளை, சிறிலங்காவுக்குப் போதிய காலஅவகாசம் அளிக்கப்பட்டு விட்டது, மேலும் அவகாசம் கொடுப்பது போர்க்குற்ற ஆதாரங்களை அழித்து விடுவதற்கே வழிவகுக்கும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை இங்கு சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றைய கலந்துரையாடலின் போது, சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைவை ஆதரிக்கின்ற மற்றும் அதனை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று கோருகின்ற நாடுகளின் கையே ஒங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் உள்ளதாக, ஜெனிவாவுக்கு கூட்டங்களில் பங்கேற்ற அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்திய அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கை புதிய தீர்மானத்தில் வெளிப்படையாக இடம்பெறக் கூடிய வாய்ப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில், நாடுகளின் கருத்துகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

சிறிலங்காவில் இருந்து சென்றிருந்த மனிதஉரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னான்டோ, மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரும் நேற்றைய கூட்டத்தில் உரையாற்றியுள்ளனர்.

இதன் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள நிமல்கா பெர்னான்டோ, சிறிலங்கா மீதான விசாரணையை ஐ.நா மனிதஉரிமை ஆணையம் மேற்கொள்ளத் தேவையான பொறிமுறை ஒன்றை சுட்டிக்காட்டக்கூடிய விதத்தில், இம்முறை தீர்மானம் அமையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

TAGS: