இலங்கையில் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை தீர்மானிக்கும் சக்தியாக புலம்பெயர் மக்கள்!

ariyam-06வடகிழக்கு மக்களுக்கு நம்பிக்கை ஒளியாக இருந்து அவர்களினுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவர்களினது விடுதலைக்காக அயராது பாடுபடுபவர்கள் புலம்பெயர் மக்கள்தான் இவர்களை ஒதுக்கிவிட்டு த.தே.கூட்டமைப்பு அரசியல் செய்ய முடியாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பிரித்தானியாவில் உள்ள நம்பிக்கை ஒளி அமைப்பினரால் மட்டக்களப்பு மண்முனை மேற்கு மாவளையாறு கைலையன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒருதொகுதி பாதணிகளும், அப்பியாசக் கொப்பிகளும் வழங்கும் நிகழ்வு நேற்றைக்கு முன்தினம் வித்தியாலய அதிபர் திருநாவுக்கரசு தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பிரித்தானிய நம்பிக்கை ஒளியின் பொருப்பாளர் சுபாஷ், இலங்கை நாட்டின் நம்பிக்கை ஒளியின் பொறுப்பாளர் சிவகாந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தின் நம்பிக்கை ஒளியின் பொறுப்பாளர் தபேந்திரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீநேசன், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கழந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்.

கல்விதான் என்றும் அழியாத செல்வம் தமிழர்களைப் பொறுத்த வரைக்கும் கல்வியும், உணர்வும் இருத்தல் மிகமிக அவசியமாகும் அப்போதுதான் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப்பெற முடியும்.

அனைவரும் படித்து கல்விமான்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் உணர்வுள்ளவர்களாக மாறும்போதுதான் அந்த சமூகத்திற்கான விடுதலையை பெறமுடியும் வெறுமனே புத்திஜீவிகள் என்று சொன்னால் மாத்திரம் போதாது மாறாக உணர்வுள்ள புத்திஜீவிகளாக மாற வேண்டும் அப்போதுதான் எமது சமூகத்தினை சரியான வழியில் கொண்டு செல்லமுடியும்.

பிரித்தானிய நம்பிக்கை ஒளி அமைப்பானது வடக்கு கிழக்கு என்று பிரித்து பார்க்காமல் பிரதேச வேறுபாடின்றி இரண்டிற்கும் ஒரே சேவையினை பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செய்து வருகின்றது.

இவ்வாறான அமைப்புக்கள் போன்றே புலத்தில் உள்ள ஏனைய அமைப்புக்களும் வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவகையில் உதவிகளை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் மக்கள் இங்கு வந்து உதவிகளை செய்கின்றார்கள் என்றால் அதனை மிகவும் இலகுவானதொன்றாக எடுத்துக்கொள்ள முடியாது காரணம் அங்கு சென்று பார்த்தால்தான் அவர்களது நிலையை எம்மால் புரிந்து கொள்ள முடியும். அத்தனை துன்பங்கள், வேதனைகளையும் அனுபவித்தே இங்குள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற சேவைகளை செய்ய முன்வருகின்றார்கள்.

அங்கு வாழுகின்ற மக்கள் இவ்வாரான உதவிகளை செய்வதோடு மாத்திரம் நின்று விடாமல் எமது போராட்டத்திற்கான இறுதித் தீர்வு கிடைக்கும் வரை சர்வதேச ரீதியாக எமது பிரச்சினையை கொண்டு செல்வதில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு அளப்பரியது என்பதனை யாரும் மறந்துவிட முடியாது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தீர்மானிக்கும் சக்தியாக புலம்பெயர் மக்கள் என்றைக்கும் இருந்து கொண்டிருப்பார்கள்.

2009க்கு பின்னர் சலுகை அரசியலுக்காக அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு தங்களது சுகபோகங்களை அனுபவிப்பவர்கள் கொள்கை ரீதியாக போராடும் த.தே.கூட்டமைப்பை சீண்டிப் பார்ப்பது பொருத்தமானதல்ல என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டும்.

த.தே.கூட்டமைப்பு சலுகை அரசியல் செய்ய வேண்டுமாக இருந்தால் என்றோ அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்து சலுகைகளைப் பெற்றிருப்போம் அது எமது கட்சியின் நோக்கமல்ல. சலுகை அரசியலை யாரும் செய்யலாம் ஆனால் த.தே.கூட்டடைப்பு என்றைக்குமே சலுகை அரசியலை செய்யாது என்பதனை சலுகை அரசியலுக்காக விலைபோனவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

67 வருடங்களாக அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் எந் இலட்சியத்திற்காக, குறிக்கோள்களுக்காக போராடினார்களோ அந்த இலட்சியத்தினை அடையும் வரை த.தே.கூட்டமைப்பு தனது கொள்கையில் இருந்து இம்மியளவும் விலகாது.

அன்று கொள்கைகளுக்காக பயணித்தவர்கள் இன்று தங்களது சுயநலனுக்காக சலுகைகளுக்கு விலைபோய் விட்டார்கள் இதுதான் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை இதனை வடகிழக்கில் உள்ள தமிழர்களும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் உணர்ந்து இருக்கின்றார்கள் என்பதனை இவர்கள் மறந்து விடக்கூடாது.

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாண தமிழ்மக்கள் ஒரு கொள்கையில் இருந்து த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தால் இன்று கிழக்கு மாகாணத்தினை த.தே.கூட்டமைப்பு ஆட்சி செய்திருக்கும் இதனை உணர்ந்து எதிர்காலத்தில் இவ்வாரான தவறுகளை விடாமல் த.தே.கூட்டமைப்பினை ஆதரிக்க வேண்டும்.

அன்று த.தே.கூட்டமைப்பினை கிழக்கு மாகாண மக்கள் ஆதரிக்காததன் காரணமாக இன்று இந்தச் சபையினால் நியமிக்கப்படும் முகாமைத்துவ உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களில் தமிழர்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகின்றார்கள் இந்தவிடயத்தில் த.தே.கூட்டமைப்பு அதனை சட்டரீதியாக முகம்கொடுக்க இருக்கின்றார்கள்.

எமது கட்சியானது வெறுமனே உணர்வு பூர்வமாக பேசுவதுடன் நிறுத்திக் கொள்பவர்கள் அல்ல உறுதி பூர்வமாகவும் மக்களுக்கான சேவையை பெற்றுக்கொடுக்க இருக்கின்றோம் என்பதனை அனைவரும் எதிர்காலத்தில் புரிந்து கொள்வார்கள் எனவும் கூறினார்.

TAGS: