ஐ. நா. சபையினால் கடந்த 4 ஆண்டுகளாக முன்மொழியப்பட்டுக்கொண்டிருக்கு
தொடர்ச்சியான இனச் சுத்திகரிப்பு மற்றும் இறுதிப்போரில் சரணடைந்த போராளிகளையும் பொதுமக்களையும் கொன்று கூட்டுப்படுகொலை நடாத்திய இராணுவ மற்றும் அரசியல்வாதிகள்மீது சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரிநிற்பது.
சரணடைந்த பொது மக்களையும் போராளிகளையும் விடுவிக்கக் கோருவது.
தமிழ் இனத்துக்கு எதிரான ஒட்டுமொத்த சிங்கள ஆதிக்க வெறியர்களின் வடிவமாக விளங்கும் சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறையினரை அம் மண்ணை விட்டு வெளியேற்றுவது.
சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தங்களது நிலங்களை மீட்டெடுப்பது, சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தக் கோருவது.
தமிழ்ப் பெண்கள்மீதான இராணுவத்தினரது காமச் சேட்டைகளை தடுப்பதற்கும் நிரந்தரமான பாதுகாப்பிற்கும் இராணுவத்தை வெளியேறக் கோருவது.
தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழீழத் தன்னாட்சி அதிகாரம் கோரிநிற்பது
போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழிந்தும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் படுகொலைகள், காணாமல்போகச்செய்தல்களை நிறுத்தக்கோருவது.
தமிழர்களின் கலாசாரச் சீர்கேட்டுக்குக் காரணமான இராணுவப்புலனாய்வாளர்களின் சதி வேலைகளை நிறுத்தக் கோருவது.
இவ் அடிப்படை உரிமைகளை அனைத்துலக நாடுகளின் தலைமையில் கண்காணிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் எத்தனிப்பது.
போன்ற பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் அப் பூமிக்குச் சொந்தமான தமிழ் மக்களை அச்சுறுத்துவதும் காணாமல்போகச் செய்வதும் போன்ற பயங்கரவாதச் செயல்களையே சிங்கள மேலாதிக்க இராணுவமும் அதன் புலனாய்வு அமைப்புகளும் அரங்கேற்றி வருகின்றன.
வருடா வருடம் மார்ச் மாதமும் நவம்பர் மாதமும் தமிழ் மக்களின் அசைவியக்கத்தை முற்றுமுழுதாக தடுக்கும் நோக்கோடு பல அடக்குமறைகளை கட்டவிழ்த்துவிடுவது இராணுவத்தினரது வழக்கம்.
உலக நாடுகளிடம் தமிழர் சார்பாக சாதாரண குடிமக்களோ, தமிழ்த் தலைமைகளோ பேசக்கூடாது என்று அச்சுறுத்துவதற்கும், தமிழர்கள் நெஞ்சாரப் போற்றும் மாவீர்களை விளக்ககேற்றி மதிப்பளிப்பளிபதனூடாக தமது ஆதிக்கத்தின்மீதான பயத்தினை தமிழர் இழந்துவிடுவர், அதனைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவுமே அந்த அடக்குமுறைகள் அதிகப் படியான இராணுவ பிரசன்னத்தாலும் பொதுமக்கள் மத்தியில் அச்சமூட்டும் தொனியில் நடந்துகொள்வது போன்ற செயல்களாலும் நடந்தேறி வந்தது.
ஆனாலும் இவ் அடக்குமுறைகளையெல்லாம்மீறி 2014ஆம் ஆண்டு அனைத்துலக நாடுகள் மழுப்பமுடியாத அளவிற்கு தமிழர்களது ஒட்டுமொத்த குரலும் ஒரே கோரிக்கையினை வலியுறுத்தி நின்றது. அத்தோடு பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியங்களாக எழுந்துநின்று தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று போராடினர். தமிழர் தாயகத்திற்கு சென்றிருந்த வெளிநாட்டவரிடமெல்லாம் தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர். தமது மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக மதத் தலைவர்கள் மற்றும் தமிழின அரசியற் தலைவர்கள் சிலரும் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ. நா. சபையின் மனிதவுரிமைக்கூட்டத்தொடருக்கு தேவையான சாட்சியங்களைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தனர்.
இந்தச் சாட்சியங்களையெல்லாம் புலம்பெயர்தமிழர்களும் மனிதஉரிமை ஆர்வலர்களும் தமது கரமேந்தி அனைத்துலக நாட்டவர்க்கும் அரசு மற்றும் அரசுசாரா அமைப்பினர்க்கும் எடுத்துரைத்தனர். புலம்பெயர் தமிழர்கள் தமது மண்ணில் தமது உறவுகள் படும் வேதனைகளை, சித்திரவதைகளை நெஞ்சினில் சுமந்தவர்களாக ஜெனீவா உட்பட பல்வேறு நகரங்களிலும் பெருந்திரளாக அணிதிரண்டு போராடினர்.
இங்கேதான் சிங்களத்தின் இராசதந்திரத்தோல்வியும் இராணுவ அடக்குமுறைத் தோல்வியும் தமிழர்களுக்கெதிரான வன்முறைப் போராக மாற்றங்கண்டு நிற்கின்றது. தமது முழுமையான இராணுவ ஆக்கிரமிப்பைமீறி சர்வதேசத்தோடு தமிழர்களின் உறவாடலைத் தவிர்ப்பதற்கு தமிழர்களை மீண்டும் பயங்கரவாதிகளாகக் காட்ட அரசு எத்தனிக்கின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது. அத்தோடு அடங்க மறுக்கும் தமிழ்த் தலைமைகளின்பின்னால் மக்கள் நீதிக்காக அணிதிரள்வதைத் தடுப்பதற்கான செயற்பாடாகவே இவ் இராணுவ வன்முறைச் செயல்கள் அமைகின்றதைக் காணலாம்.
தமிழ் இன உணர்வாளர்கள் என்று இனங்காணப்பட்டவர்களை, ஆண், பெண், குழந்தைகள் என்றும் பாராமல் விடுதலைப் புலி என்ற போர்வையில் பாரிய இராணுவ வேட்டைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். துண்டுப் பிரசுரம் வைத்திருந்தவர்கள் கைது என்று தொடங்கி காணாமல்போன பிள்ளைகளின் உறவுகள் கைதாகி, சிங்கள இராணுவத்தினன் காயம் என்று அறிவிப்புக்களும் அடக்குமுறைகளும் தொடர்கின்றன. ஊர்மனைகளை அச்சுறுத்தும்வகையில் சாதாரண பொதுமக்களும் பொதுப்பணியில் ஈடுபடுபவர்களும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இக் கொடுமைகளைக் கண்டும், காணாமுகத்தோடு உலகம் இருக்குமாயின் 2009 ஆம் ஆண்டு விட்ட தவறையே மீண்டுமொருமுறை அனைத்துலக நாடுகள் விடுவதாக அமையும். தமிழர்களை அழித்தொழிக்கும் நிலைப்பாட்டினை சிங்களம் தொடர்ந்து கைக்கொள்வதால், தமிழர்களுக்கான நீதிக்கும் பாதுகாப்பிற்கும் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் ஐ. நா. சபையும் அவர்களது மனிதவுரிமை ஆணையமுமே !
தமிழீழத்தில் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழ் அரசியற் தலைவர்கள் உடனடியாக முன்னெடுக்கவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து ஈழத்தில் தமிழர்களின் நிலை குறித்தும் தமிழர்களின் பாதுகாப்பிற்கான அனைத்துலகப் பொறிமுறைகுறித்தும் உலக நாடுகளின் காலதாமதமற்ற ஈடுபாட்டை வலியுறுத்தியும் போராடவேண்டியவர்களாக உள்ளனர் என்பதே இன்றைய வேதனையான செய்தியாகும்!
தமிழனக்கு தனி நாடு இல்லாததால் கண்டவன் எல்லாம் தலையில் தட்டுகிறான்.