அமெரிக்காவின் இலக்கு! பொறுப்புக்கூறலா – ஆட்சி மாற்றமா?

usa_indian flagஐநா மனித உரிமைகள் பேரவை நாடுகளிடம் அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மான வரைபுக்கு ஆதரவு தேடும் முயற்சிகளும், அதனைத் தோற்றகடிப்பதற்கான நகர்வுகளும் ஜெனிவாவில் தீவிரம் பெற்றுள்ளன.

இரண்டு தரப்புகளுமே உறுப்பு நாடுகளினதும் வாக்களிக்கும் உறுப்புரிமை பெற்றிராத நாடுகளினதும் ஆதரவைக் கோரி நிற்கின்றன.

ஏட்டிக்குப் போட்டியாக இணை அமர்வுகள், கூட்டங்களை ஒழுங்கு செய்து தமது ஆதரவை உறுதிப்படுத்துவதில் இருதரப்பும் மும்முரம் காட்டுகின்றன.

இந்தநிலையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மான வரைபை முன்வைத்து ஐநா மனித உரிமைகள் பேரவை நகர்வுகளுடன் தொடர்புபடாத தரப்புகள் மத்தியிலும் பலத்த விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

இத்தகைய விவாதங்களில்,

01. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை முன்வைக்காமல் அமெரிக்கா ஏமாற்றி விட்டது.

02. கடந்த காலங்களைப் போன்றே தமிழர் தரப்பு சர்வதேச சமூகத்தை நம்பி ஏமாந்துவிட்டது. இனியும் இவ்வாறு இருக்கக்கூடாது.

03. அமெரிக்காவின் இலக்கு குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதல்ல. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதே.

04. இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு காரணம் இங்கு இராணுவத்தளத்தை அமைத்துக் கொள்வதே.

என்பன போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுவதைக் காணமுடிகிறது.

இந்தநிலையில் இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்வி பலரிடமும் தோன்றுவது இயல்பு.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் ஒரேநோக்கம் தமது நலன்களை அடைவது மட்டும் தான் என்று முழுமையாகக் கூறமுடியாது.

ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தாமர குணநாயகம் ஒரு இடதுசாரி சிந்தனை கொண்டவர்.

இலங்கையில் தளம் அமைப்பதற்காகவே அமெரிக்கா இந்த நகர்வில் ஈடுபடுகின்றது என்று அவர் வாதிடுவது முற்றிலும் சரியானதாகத் தெரியவில்லை.

ஏனென்றால் இலங்கை ஒரு மூலோபாய கேந்திரம் மிக்க இடமாக இருந்தாலும் இங்கு இராணுவத்தளம் ஒன்றை அமைக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் திட்டங்கள் இருப்பதமாகத் தெரியவில்லை.

ஏனென்றால் அயல்நாடான இந்தியாவின் எதிர்பபை அது சம்பாதித்துக் கொடுக்கும் என்பது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும். இலங்கையில் தளமொன்றை அமைப்பதற்காக ஆசியாவில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பொன்றை இழக்க அமெரிக்கா தயாரில்லை.

அதாவது 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவை தமது பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நல்ல சந்தையாகவே அமெரிக்கா பார்க்கிறது.

குறிப்பாக போர்த்தளபாட ஏற்றுமதி மூலம் நல்ல வருமானத்தைப் பெறுகிறது.

தேவ்யானி விவகாரத்தினால் இருதரப்பு உறவுகளில் முரண்பாடுகள் ஏற்பட்ட போது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் இந்த விவகாரத்தினால் ஆசியாவில் அமெரிக்கா ஒரு மிகச்சிறந்த சந்தையை இழந்துவிட முடியாது என்று கூறியிருந்தார்.

எனவே அமெரிக்க பொதுகாப்புக்கு மட்டுமன்றி தமது வர்த்தக விருத்திக்கும் இந்தியாவினது ஒத்துழைப்பு அவசியம் எனக் கருதுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தாமர குணநாயகம் கூறுவது போன்று இலங்கையில் தளமொன்றை அமைப்பது மட்டும் தான் அமெரிக்காவினது இலக்கு என்று வரையறுப்பது முடியாத காரியமாகும். தளங்களை அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் யுகம் மெல்ல மெல்�ல மறைந்து வருகிறது.

அதற்காக இலங்கை யின் கேந்திர முக்கியத்துவத்தை அமெரிக்கா குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ள முடியாது. இலங்கையில் தளம் அமைக்க முடியாது போனாலும் தமது நலனுக்கு விரோதமாக அது பயன்படுத்தப்படாது என்று உறுதிப்படுத்திக் கொள்வது அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையின் ஒரு அம்சமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதைச்சாத்தியப்படுத்திக் கொள்வது ஒன்றும் அவ்வளவு இலகுவானதல்ல. அந்த இலக்கை அடைவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகக்கூட இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய நகர்வுகளைக் குறிப்பிடலாம்.

அதாவது இப்போதைய அரசாங்கம் அமெரிக்காவின் நலன்களுக்கு வழிவிடுவதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை.

ஏனென்றால் அது சீனாவின் நிழலில் தங்கியிருக்கின்றது.

அதுமட்டுமன்றி தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறைகளும் கூட அமெரிக்கா எதிர்பார்க்கின்ற விடயங்களுக்கு முற்றிலும் எதிர்மாறானதாகவே இருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவுக்கு இருக்கின்ற ஒரே தெரிவு ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதேயாகும்.

தனது நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு ஆரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம் அமெரிக்காவினால் இதனை அடையலாம். உலகில் இத்தகைய எத்தனையோ ஆட்சி மாற்றங்களை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆபிரிக்க நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் இத்தகைய பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இப்போது உக்ரேனில் நடப்பது கூட அத்தகைய ஒரு பின்புல முயற்சியாகவே கருதப்படுகிறது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முழுமையாகத் தோல்வியுற்ற நாடு என்றால் அது கியூபா மட்டும்தான்.

வடகொரியா விடயத்தில் அமெரிக்கா ஆட்சி மாற்றத்தில் அதிக அக்கறை செலுத்தியதாக கொள்ள முடியாது.

அண்மைக்காலத்தில் சிரியா அதற்குச் சவாலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள அமெரிக்கா நினைக்கலாம். சட்டத்தின் ஆட்சி பற்றி இப்போது மேற்குலகினால் அதிகமாகப் பேசப்படுவதைக் கவனிக்கலாம்.

அமெரிக்கா என்றாலும் சரி பிரித்தானியா என்றாலும் சரி ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்றாலும் சரி சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இல்லை என்று தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றனர். கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கூட இதைப்பற்றிப் பேசியுள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை நிறுத்துவதன் மூலம் சர்வதேச தலையீடுகளிலிருந்து தப்பிக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கம் அதைச் செய்தால் அமெரிக்காவுக்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது தலையீடு செய்வதற்கான ஒரு பிடிமானம் இல்லாமல் போய்விடும் என்பதே அவரது கருத்தாகத் தெரிகிறது.

அதேவேளை சட்டத்தின் ஆட்சியை இன்றைய சூழலில் ஆட்சி மாற்றத்துக்கான ஒரு விதையாகக்கூடக் கருதலாம்.

சட்டத்தின் ஆட்சியை மீள நிறுவுவதன் மூலம் இலங்கையில் அமெரிக்கா சுடம்டிக்காட்டும் குறைபாடுகள் எல்லாவற்றையும் களைவதற்கான சூழல் உருவாக்கப்படும்.

ஜனநாயகம், ஊடக சுதந்திரம், நீதித்துறை சுதந்திரம், ஊழல், மத சுதந்திரம், பொறுப்புக்கூறல் என்று எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று கருதக்கூடும்.

இந்த அரசாங்கத்தைக் கொண்டு பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் என்று தான் நினைத்த எதையும் அமெரிக்காவினாலோ சர்வதேச சமூகத்தினாலோ சாதிக்க முடியவில்லை. இதற்கு மேல் பொருளாதாரத் தடை உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம் இலங்கை மீது அழுத்தங்களைக் கொடுப்பதற்கு சர்வதேச சூழமைவுகள் அவ்வளவாக இடம்கொடுக்கவும் மாட்டாது. அவ்வாறு செய்வதானாலும் கூசூட அதை அமெரிக்காவும் மேற்குலகும் மட்டும் தன்னிச்சையாகவே மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே தமக்கு வசதியான ஆட்சியொன்றை இலங்கையில் நிறுத்துவதன் மூலம் அடைய நினைத்த இலக்குகளை அடையலாம் என்று அமெரிக்கா சிந்தித்தால் அது ஆச்சரியமானதாக இருக்க முடியாது.

அதேவேளை இந்த விவகாரத்தில் அமெரிக்காவினது தலையீடுகள் முற்றுமுழுதாக தனது நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்று எதிர்பார்ப்பது சற்று மிகையானதாகவே தோன்றுகிறது.

ஏனென்றால் பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுக்க முடியாது. அவைதான் இந்தக் காய் நகர்த்தல்களின் மையமாக உள்ளன.

அதேவேளை இத்தகையதொரு சூழலை அமெரிக்காவாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கமே அந்தச் சூழலை உருவாக்கிக் கொடுத்தது. போர்  முடிவுக்கு வந்தவுடன் ஜனாதிபதி மகிந்தவுக்கு வாழ்த்துக்கூறிய அமெரிக்க தூதுவராக இருந்த றொபேட் ஓ பிளேக் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் இரண்டும் அவசியம் என்று வலியுறுத்தியிருந்தார்.

அதன் தொடர்ச்சி தான் இன்று ஜெனிவாவில் இலங்கையின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கிறது. அப்போது பிளேக் சொன்னதை அரசாங்கம் தெளிவாகப் புரிந்து செயற்பட்டிருந்தாலோ அல்லது அதற்குப் பின்னரேனும் அமெரிக்காவின் கருத்துகளை சரியாகச் செவி மடுத்திருந்தாலோ பொறுப்புக்கூறலை மையமாக வைத்து சட்டத்தின் ஆட்சியை மீள நிறுவுவதற்கு அமெரிக்காவினால் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போயிருக்கும்.

அதேவேளை சட்டத்தின் ஆட்சி இலங்கையில் மீள நிறுவப்பட்டால�் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டுவிட்டால் பொறுப்புக்கூறலை அமெரிக்கா மறந்து போய்விடும் என்ற கருத்தும் உள்ளது.

ஆனால் அவ்வளவு இலகுவாக அமெரிக்காவினால் இந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவும் முடியாது. ஏனென்றால் இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா கைவைத்ததே பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தை மையப்படுத்தித்தான்.

எனவே அந்த இலக்கை அடைய வேண்டும் அல்லது அதனை அடைந்து விட்டதாகவேனும் உலகிற்கு காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உள்ளது.

அமெரிக்காவினது மைய இலக்கு எதுவென்பது இங்கு முக்கியமானதல்ல.

அமெரிக்கா தனது இலக்கை அடைய மேற்கொள்ளும் வழிமுறைகளின் ஊடாக தமிழர் தரப்பு தமது இலக்குகளை அடைய முயற்சித்தலே இப்போது முக்கியமானது.

நெல்லுக்கு இறைத்த நீர் வாயக்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்ற கருத்தை இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் நெல்லாக இருந்து அந்த நீரை முழுமையாக அடைய முடியாது போனாலும் புல்லுக்குக் கிடைக்கும் நீரைப்போல ஒரு பகுதியையேனும் அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்றே தெரிகிறது.

– ஹரிகரன்.

TAGS: