இனி எங்கள் தமிழ் மண்ணில் இதுதான் நிலைமை

Students_at_Hindu_College,_Jaffnaதட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. இப்பழமொழி எல்லோருக்கும் பொருத்தமானதே. தட்டிக்கேட்பது என்பது அமைதியான வாழ்விற்கு மிகவும் அவசியமானது.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வடபகுதி இருந்த போது, இளைஞர்களிடம் தமிழின உணர்வே மேலோங்கி இருந்தது. களவு, கொள்ளை, கோஷ்டி மோதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அந்த நேரத்தில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும் குப்பிவிளக்கில் படித்து படைத்த சாதனையால் தமிழினம் பெருமை கொண்டது.

பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உயர்தரத்தில் விசேட சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு கொழும்பில் நடந்தது.

முள்ளியவளையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் அந்த நிகழ்வு வேளையில் மேடையில் ஏறி,  குப்பி விளக்கில் படித்தே இச் சாதனையை படைத்தேன் என்றான். அந்த மாணவன் அவ்வாறு கூறிய போது கரகோச ஒலி அடங்க சில நிமிட நேரம் எடுத்தது.

அதே நேரம் குப்பிவிளக்கில் படித்து பெரும் சாதனை படைக்கப்பட்டது என்ற போது, தமிழன் எத்துயர் வந்த போதிலும் கல்வியை விடமாட்டான் என்று பெருமையாகப் பேசப்பட்டது.

ஆனால் இப்போது எங்கள் நிலைமை என்ன? என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். கிரிக்கெட் போட்டியில் கூட அடித்துக் கொலை செய்யும் அளவில் எங்கள் சமகால நிலைமை உருவாயிற்று.

கிரிக்கெட் விளையாட்டு என்பது ரசனைக்குரியது. அதிலும் எங்கள் மாணவர்கள் விளையாடுகின்ற கிரிக்கெட் போட்டி எனும் போது உற்சாகமும் விறுவிறுப்பும் உச்சமாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இங்கு நடந்ததோ வேறு.

மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கின்றது. வீரர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் அதில் லயித்துப் போயுள்ளனர்.

அந்த நேரத்தில் எங்கோ ஒரு சந்தியில் தடிகொடி பிடித்து பான்ட் அடித்து ஆட்டம் போடுவது எதற்கானது? கிரிக்கெட் ரசனை என்றால் மைதானத்தில் இருந்து அவதானித்துப் பார்க்க வேண்டும்.

இதை விடுத்து சந்திகளில்- வீதிகளில் கூடிநின்று ஆடுவது என்பது எந்த வகையிலும் நியாயமாகாது.இத்தகைய ஆட்டங்கள், பாட்டங்கள் எங்கள் மாணவ சமூகத்துக்கு தவறான வழியைக் காட்டிக் கொடுப்பதாக அமையும்.

எனவே இத்தகைய விடயங்களைத் தவிர்த்து, விளையாட்டு எங்கள் ஆளுமையை வளர்க்கும் துறை என்பதாக அதனை நோக்கவேண்டும்.

விளையாடுகின்றவர்கள், ரசிகர்கள், ஏற்பாட்டாளர்கள் என்ற தரப்பினர் போக இன்னொரு தரப்பு குடி, போதைப் பாவனை என்பதனூடாக எல்லாவற்றையும் சீர்குலைப்பதில் திடசங்கற்பம் கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் ஒரு இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்திக்குள் இருக்கக்கூடிய உண்மைகள் எங்கள் இனம் நெறி தவறிப் போகின்றது என்பதன் அடையாளமாகும்.

அதற்கு அப்பால் பூனையில்லாத வீட்டில் எலிகள் சன்னதம் ஆடுகின்றன என்பதையும் இச்சம்பவம் நிரூபிக்கின்றது.

இனி எங்கள் தமிழ் மண்ணில் இதுதான் நிலைமை எனும் அளவில் கோஷ்டி மோதல்கள், இருட்டடிகள் என்ற கொடூரங்கள் அதிதீவிரம் அடையும் என்பது உண்மையே.

TAGS: