யுத்தக் குற்றங்களுக்கான தண்டனை இலங்கையின் சட்டவாட்சியை வலுப்படுத்தும்!– வில்லியம் ஹெக்

william_hagueஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கெதிரான பிரேரணைக்கு ஆதரவு கோரியுள்ள பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹெக், உண்மையை எதிர்பார்க்கும் மக்களுக்கு அதனை வழங்குவதற்கு நம்பகத் தன்மை வாய்ந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையான அரசியலை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன பொறிமுறையொன்றை கோரும் பிரேரணைக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்கள் ஆதரவளிப்பதற்கான காரணங்கள் நான்கையும், ஹெக் தனது ஆக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் இன்றி நீண்டகால சமாதானத்தை எட்டுவது இலங்கைக்கு மிகவும் கடினமானதொரு விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சரியான பாதையில் பயணிப்பதற்கு உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவது முக்கியத்துவம் வாய்ந்தது என வில்லியம் ஹெக் தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக, சுயாதீனமான, நியாயமான உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதற்கும், மனித உரிமைகளுக்கான ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையினால் 2010 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும நல்லிணக்க ஆணைக்குழு இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் கூறியுள்ளார்.

பரிந்துரைகளை அமுல்படுத்தி, இலங்கை நம்பகத் தன்மை வாய்ந்த முன்னேற்றத்தினை அடைந்திருந்தால், தற்போதுள்ள நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் சர்வதேச நடவடிக்கைக்குப் பதிலாக, கடந்தகால வன்முறைகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருப்போம்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சர்வதேச பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கு, சர்வதேச சமூகத்திடம் நடவடிக்கை எடுக்குமாறு கோருவதற்கும், சமாதான ஆர்வலரான பேராயர் டெஸ்மன் டூட்டூ உள்ளிட்ட பல்வேறு சுயாதீனமானவர்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளின் ஆதரவு காணப்படுவதாக வில்லியம் ஹெக் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தகாலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் வன்முறைகளுக்கு தண்டனைகள் வழங்கப்படுதல் இலங்கையின் சட்டவாட்சியை வலுப்படுத்தும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பாதுகாப்பு உரிமை காணப்படுவதுடன், எவரும் சட்டத்திற்கு மேலாக செல்வதற்கு இடமளிக்கப்பட கூடாதென்ற செய்தியை சர்வதேச சமூகம் தெரிவிக்க வேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: