இலங்கையின் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாகிய ருக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவின் மகேசன் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, வடமாகாண சபையினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.
மாதாந்த அமர்வுக்காக காலையில் கூடிய சபை நடவடிக்கைகள் முடிவுற்ற பின்னர், சபை முன்றலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும், முதலமைச்சர் வின்னேஸ்வரன் மற்றும் அவைத் தலைவர் சிவிகேசிவஞானம் ஆகியோரின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ருந்த சபை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றும் ஜனாதிபதிக்கும், நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வீட்டில் இருந்தவேளை, பாலேந்திரன் ஜெயக்குமாரி அந்தப் பிரதேசத்தைச் சுற்றி வளைத்த படையினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
அவருடைய மகளாகிய விபூசிக்கா என்ற 14 வயது சிறுமி கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து விபரம் தெரிவித்த வடமாகாண சபையின் அவைத் தலைவர் சிவிகேசிவஞானம், அடிப்படை மனித உரிமைகளை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறி வருவதை அந்த அரசுக்கும் உலக நாடுகளுக்கும் எடுத்துக் காட்டுவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை தாங்கள் நடத்தியதாகக் கூறினார்.
“காணாமல் போயுள்ள தனது மகனை ஜெயக்குமாரி தேடிக்கொண்டிருக்கின்றார். அவருடைய 14 வயது மகளாகிய விபூசிக்கா தனது அண்ணனைக் காணாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார். இந்த அப்பாவிப் பெண்களைக் கைது செய்வத்றகாகப் புனையப்பட்ட காரணங்களை முன்வைத்து அரசாங்கத்தின் பாதுகாப்பு இயந்திரம் நாடகமாடியுள்ளது. இதுபற்றிய நிலைமைகளை அறிய முயன்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு கைது செய்திருக்கின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” என்றார் சிவஞானம்.
கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள அருட்தந்தை பிரவின் மகேசன் அவர்களை சென்று பார்ப்பதற்கு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அனுமதித்திருந்தனர் என்ற அமலமரித் தியாகிகள் சபையின் வடமாகாண முதல்வர் அருட்தந்தை போல் நட்சத்திரம் தெரிவித்தார்.
இதேபோன்று ருக்கி பெர்னாண்டோ அவர்களை அவருடைய பெற்றோர் சென்று பார்ப்பபதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பாலேந்திரன் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். -BBC
மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் இருவரும் நேற்றிரவு விடுவிப்பு
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இரண்டு மனிதஉரிமை செயற்பாட்டாளர்களையும், இலங்கை அரசாங்கம் நேற்றிரவு விடுதலை செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கிளிநொச்சியில் வைத்துக் கைது செய்யப்பட்ட, ருக்கி பெர்னான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் நேற்றிரவு 11 மணியளவில், இலங்கை காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்கள் இருவரும் சுமார் 48 மணிநேரமாக, தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்தனர். 48 மணிநேரத்துக்கு மேல் தடுத்து வைக்க நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
அந்த காலஅவகாசம் முடிவடைய ஒரு மணிநேரம் முன்னதாக, பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரின் விசாரணைகள் முடிவுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மனிதஉரிமை செயற்பாட்டாளர்களின் கைது அனைத்துலக அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
நேற்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும், இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.
எனினும், இலங்கை அரசாங்கம் இந்தக் கைதுகளை நியாயப்படுத்தி குறித்த இருவரும் புலிகளுடன் தொடர்பு என அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதிலும், அனைத்துலக அழுத்தங்களின் தீவிரம் கருதி நேற்றிரவு இருவரும் விடுதலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.