ஜெனிவாவில் எவ்வித தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!- பீரிஸ்

gl_perisஜெனீவா தீர்மானம் எதுவாக இருப்பினும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது   என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று தெரிவித்தார்.

ஜெனீவாவில் எமக்கு பலமான சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகளை இன்று அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது அரசியல் நோக்கங்களுக்காக மிகவும் சூட்சுமமான முறையில் மனித உரிமைகள் என்ற போர்வையின் கீழ் கொண்டு வருகிறார்கள்.

நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

மார்ச் 29 ஆம் திகதியுடன் இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாக பிரேரணை முன்வைக்கப்படுகிறது.

நவநீதம்பிள்ளை ஏற்கனவே இலங்கைக்கு எதிரான மனப்பான்மையை கொண்டவர் என்பது நாம் அறிந்த விடயமே.

30 வருட காலமாக புலிகள் சேகரித்த பணம் இன்னமும் இருக்கிறது.  புலிகளின் முக்கியஸ்தர்கள் இன்று இல்லாவிட்டாலும் உலக நாடுகளில் இந்தப் பணம் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டு இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாடுகளில் பிரச்சினைகள் உள்ளன. எனினும் ஜெனீவாவில் இலங்கையைத் தான் முதலில் பேசுகிறார்கள்.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையில் 8வது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை நவநீதம்பிள்ளையிடம் கையளிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது திருடனின் தாயிடமே திருடனை பற்றி கேட்பது போன்றது.

ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் இலங்கை அதனை பொருட்படுத்தாது.  அதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. இது எமது அரசியலமைப்புக்கு முரணானது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வரவேண்டும் என்ற பேச்சே எழவில்லை. பிரேரணையை கொண்டுவரும் நாடுகள்கூட பொருளாதாரத் தடை பற்றி பேசவில்லை.

இவ்வாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

TAGS: