சிங்களப் படையில் தமிழ்ப் பெண்கள்: கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதி

training_army_001சிறீலங்கா படையில் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் படையில், அவர்கள் பயிற்சியின்போது துன்புறுத்தப்படும் காணொளி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

நாம் முன்பே பல தடவை பதிவு செய்ததை இந்த காணொளிகள் உறுதி செய்கின்றன. அதாவது,

சிறீலங்கா இராணுவத்தில் ஏற்கனவே சிங்களப் பெண்கள் இணைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் “எடுபிடி” களாகவே இருந்தர்களே ஒழிய, படையணிகளில் இணைக்கப்பட்டிருக்கவில்லை. சிறீலங்கா இராணுவத்தில் சிங்களப் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் ஊரறியாதவை.

பல சிங்கள மனித உரிமையாளர்களாலும் பல்கலைக்கழக புலமையாளர்களாலும் சிங்களப் படையில் பெண்கள் மீது தொடரும் வன்முறைகள் பற்றிய கருத்துக்கள் நிறையவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலும் அதிகாரிகளின் பாலியல் சித்திரவதைகளை சகித்தே சிங்களப் பெண்கள் பணிபுரியும் நிலை இருக்கிறது.  அத்தோடு பொதுவாக உலகெங்கும் இராணுவ கட்டமைப்புக்களில் இருக்கும் குறைபாடு என்றபோதும் சிறீலங்கா இராணுவத்தில் கட்டற்ற அளவில் ஒரு “வன்முறை கட்டமைப்பு” இருப்பது பல தடவை அவதானிக்கப்ட்டுள்ளது.

தமிழ் மக்கள் தொகுதிக்குள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மீது கற்பனையில் சிந்தித்து பார்க்க முடியாத வன்முறையை சிங்களப் படைகள் நிகழ்த்தியிருக்கின்றன. கட்டற்ற வன்முறை என்பது சிங்களப்படைகளின் ஒரு கூட்டு அடையாள வடிவமாகவே இருக்கிறது.

அத்தோடு பெண்களை படையணிகளில் மட்டுமல்ல இராணுவ கட்டமைப்பின் எந்த அதிகாரத்திலும் சிங்களம் நிறுத்தியதில்லை. ஆணாதிக்கத்தின் உச்ச அடையாளத்தை சிங்கள படைக்கட்டமைப்புக்களில் காணலாம்.

மனநோயாளிகள் போன்ற நடத்தையுள்ள கட்டற்ற வன்முறையை பிரயோகிக்கும் ஆணாதிக்க மரபை பேணும் ஒரு படைக்கட்டமைப்புக்குள் பெண்கள் நுழைந்தால் என்னதான் நடக்கும்?

தமிழ் மக்களுக்கு நிறையவே அனுபவம் இருந்தாலும் இந்த காணொளிகளை அவதானித்தால் மற்றவர்களுக்கும் சிங்கள இனஅழிப்பு படையின் உளவியல் புரியும்.

இதனால் தான் பல தற்கொலைகள் உளவியல் சிதைவுகள் என்று கறுப்பு பக்கங்களால் சிறீலங்கா இராணுவ வரலாறு நிரம்பிக்கிடக்கிறது. தமிழர்களுடன் நடந்த போரின் விளைவாக இவை எல்லாம் மூடி மறைக்கப்பட்டுவிட்டன.

சிங்கள பெண்களுக்கே இந்த நிலை என்று சொன்னால் தீவிர இன அழிப்பில் இறங்கியிருக்கும் சிங்கள இராணுவம் தமிழ் பெண்களை என்ன செய்யும்.? என்ற நமது கேள்வி தற்போது அதன் உச்சத்தை எட்டிவிட்டதாகவே நாம் கருதுகிறோம்.

இது தமிழ்ப் பெண்கள் தொடர்பான காணெளியா என்பதை சரியாக அறியமுடியவில்லை. பெரும்பாலும் சிங்களப் பெண்கள் படையில் பயிற்சி பெறும்போது நடந்த ஒரு வன்முறைப் பதிவாக இது இருக்க வாய்ப்புண்டு.

தற்போது இதை வெளிப்படுத்தியிருப்பதன் பின்னணியில் இனஅழிப்பு அரசின் புலனாய்வுத்துறைக்கு பங்கிருக்க வேண்டும் என்றே நாம் கருதுகிறோம்.

ஏனென்றால் இந்த செய்திகள் ஊடக வெளியிலும் மற்றும் மக்கள் தொகுதிக்குள்ளும் ஏற்படுத்தியிருக்கும் உளவியல் பிரதிபலிப்புக்கள் வழி நாம் அதன் நுட்பமான பின்னணியை அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது.

“சிங்களப்படையில் தமிழ்ப் பெண்கள்” என்பதை கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதியாகவே நாம் அடையாளம் காண்கிறோம். இந்த அடிப்படையில் தமிழ்ப் பெண்களை சிங்களப் படையணியில் இணைத்ததன் பிரதான நோக்கமாக நாம் பலவற்றை ஏற்கனவே பட்டியலிட்டிருக்கிறோம்.

01. தமிழர்களையும் தாம் படையில் இணைத்திருக்கிறோம் என்று உலகத்திற்கு காட்டுவதற்கு.

02. படையணியில் சேர்க்காமல் தமது எடுபிடி வேலைகளுக்கு அமர்த்துவதன் மூலம் சுற்றியுள்ள தமிழ் சமுகத்தையும் அந்த பெண்களையும் “அடிமைகள்”, “தோற்றுபோனவர்கள்” என்ற உளவியலுக்குள் தள்ளுவதற்கு..

03. தமது பாலியல் தேவைகளுக்கும் அதன் விளைவாக இனக்கலப்பை உருவாக்குவதற்கும்..

என்று இப்படி நுண்மையான இன அழிப்பு காரணங்களை நாம் நிறையவே பட்டியலிடலாம்.

தற்போது சிங்களப் பெண்கள் சிறீலங்காப் படையணியில் படும் துயரத்தை “தமிழ்ப் பெண்கள்” என்ற அடிப்படையில் பரப்புவதன் பின்னணியில் நாம் இரண்டாவதாகக் குறிப்பிடும் காரணம் இருக்கலாமோ என்று சந்தேகப்படுகிறோம்.

அதாவது தமிழ் சமுகத்தையும் அந்த பெண்களையும் “அடிமைகள்” ,“தோற்றுபோனவர்கள்” என்ற உளவியலுக்குள் தள்ளும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் நிகழ்ச்சி நிரலை இந்த காணொளிகளினூடாக சாதிக்க சிங்களம் முற்படுவதாகவும் நாம் கருத இடமுண்டு.

அத்தோடு சிங்களம் ஜெனிவா நிகழ்ச்சி நிரலுக்காக தாயகத்தில் ஒரு போலி போர்ச்சூழலை கட்டமைக்க பெரும் பிரயத்தனப்பட்டுகொண்டிருக்கும் நிலையில் இந்த காணொளிகளை வைத்து இளைய தமிழ் தலைமுறைக்குள் வன்முறை பாதையை தெரிவு செய்யும் ஒரு வழியை சிங்களம் தேடுகிறதா என்றும் நாம் சிந்திக்க தோன்றுகிறது.

ஆனால் சிங்களத்தின் எந்த முயற்சியும் பலனளிக்கபோவதில்லை என்பதே யதார்த்தம்.

குறிப்பாக தமிழர்களை “தோற்றுப்போனவர்கள், அடிமைகள்” என்ற உளவியலுக்குள் தள்ளுவது கடினம். இந்த காணொளிகளின் நோக்கம் அதுதான் என்றால் அதை சிங்களம் இன்றல்ல என்றுமே அதை சாதிக்க முடியாது.

தமிழ்ப் பெண்களின் படைவலிமை, போர்த்திறன், படைநடத்தும் ஆளுமை புலிகளின் காலத்தில் ஒரு வரலாறாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

கற்பனைக்கு எட்டாத , கொலிவுட் திரைப்படங்களில் கூட பதிவு செய்யமுடியாத படைத்துறை சாதனைகளை தமிழ்ப்பெண்கள் நடத்தி முடித்துவிட்டார்கள்.

பொதுவாக மனித பாலினங்களில் ஆண்களை விட பெண்களே வலிமையானவர்கள், ஆணாதிக்க உலகில் பெண்களை ஒருபக்கம் புனிதமாகவும் மறுபக்கம் போகப்பொருளாகவும் மாற்றி பெண்களை “பெண்மை”யாக்கியதுதான் வரலாறு.

ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தலைவர் பிரபாகரன் பெண்களின் வலிமையை மீண்டும் மீட்டெடுத்தார். அவர்களை அவர்களாகவே மீளுருவாக்கம் செய்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக பெண்ணிய தளத்தில் பேசப்பட வேண்டிய பெரியதொரு வரலாறு இது. இத்தகையதொரு தளத்தில் மேலெழுந்து நின்ற தமிழ்ச்சமூகத்தின் மீதான ஒரு பழிவாங்கல் தான் தமிழ்ப் பெண்களை படையில் இணைத்தமையாகும்.

விளைவாக “அடிமைகள் தோற்றுப்போனவர்கள்” என்ற உளவியலை தமிழ்ச் சமூகத்தில் விதைத்து கட்டமைகக்ப்பட்ட இனஅழிப்பை துரிதப்படுத்துவதே இதன் பின்னணியாகும்.

பெண்களை அனைத்து தளங்களிலும் குறிவைக்கும் தந்திரம் இதுதான். எனவே சிங்களப் படையில் இணைக்கப்பட்ட பெண்களை மீட்பதென்பது கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு எதிரான எமது போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அத்தோடு காலம் காலமாக சிறீலங்கா படையில் இணைந்து வன்முறைக்குள்ளாகும் சிங்களப்பெண்களை மீட்பதென்பது பெண் விடுதலையையும் சுதந்திரத்தையும் உலகளவில் உறுதி செய்வதுடன் மனிதநேயம் உள்ள எல்லோருக்குமுள்ள தார்மீக அறமுமாகும்.

பரணி கிருஸ்ணரஜனி
[email protected]

TAGS: