வடக்கில் தீவிரமடையும் இராணுவத்தின் தேடுதல்கள்

weliweriyaஇலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளாகின்ற நிலையில், இறுதி யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் மீண்டும் அணிசேர முயற்சிக்கின்றார்கள் எனக் கூறி, யுத்தம் நடைபெற்ற வடபகுதியில் கிராமங்களை இராணுவத்தினர் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அண்மைய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, சங்கரத்தை பகுதிகள் வெள்ளிக்கிழமை இரவு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சனிக்கிழமை காலை பத்துமணி வரை தேடுதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்த காவல்துறையினர், அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக இத்தகைய சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

வட்டுக்கோட்டையில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தியது பற்றி ஊர்வாசிகள் முறையிட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் அந்தப் பகுதிக்குச் சென்று நிலைமைகளைக் கண்டறிந்துள்ளனர்.

‘அரசு நாடகமாடுகிறது’

 

வடக்கில் பெண்களை இராணுவத்தில் சேருமாறு இராணுவத்தினர் வற்புறுத்துவதாக அமைச்சர் ஜங்கரநேசனுக்கு முன்னர் முறைப்பாடுகள் வந்தன

 

வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியளவில் ஊருக்குள் புகுந்த இராணுவத்தினரும் காவல்துறையினரும், ஊரைச் சுற்றிவளைத்திருந்ததாகவும், சனிக்கிழமை அதிகாலை ஊரில் உள்ள இளைஞர்களைப் பொது இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று, அங்கு சுமார் 25 இளைஞர்களைத் தடுத்து வைத்திருந்ததாகவும் ஊர்வாசிகள் தம்மிடம் முறையிட்டிருந்ததாக வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.

ஊருக்குப் புதியவர்களாகிய இவர்கள் அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி தெரிவித்த தகவல் மூலம் அறிந்ததாகவும் ஐங்கரநேசன் கூறினார்.

‘ஜெனிவாவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாகப் பதற்றமடைந்துள்ள அரசு, விடுதலைப்புலிகள் மீண்டும் தலையெடுத்திருக்கின்றார்கள் என்பதை சர்வதேசத்திற்குக் காட்டுவதற்காக நாடகமாடி, தமிழ் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை’ மேற்கொண்ருப்பதாக ஐங்கரநேசன் குற்றம் சாட்டினார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பு கருதி இந்தத் தேடுதல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக இலங்கை இராணுவம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தது.

தர்மபுரத்தில் காவல்துறை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கோபி என்ற விடுதலைப் புலி சந்தேகநபரைத் தேடி காவல்துறையுடன் இணைந்து இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தமிழோசையிடம் கூறினார்.

மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்வதே தமது நோக்கம் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். -BBC

TAGS: