இறுதி வரைவு முன்னேற்றகரமானது என்கிறது உலகத் தமிழர் பேரவை

navaneetham-pillai1இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு முன்னேற்றகரமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வந்த வரைவை விட இந்த வரைவு முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், ஆனாலும் இதனையும் விட இறுக்கமானதாக இதனைக் கொண்டுவந்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை விசாரணைகளை கண்காணிக்க வேண்டும் என்ற விடயம் உண்மையில் ஒரு சர்வதேச ரீதியிலான விசாரணைக்கு சமமானது என்றும் ஆகவே அது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சர் கருத்து

அதேவேளை, இலங்கையின் தலைநகர் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இலங்கையின் மூத்த அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வா அவர்கள், சர்வதேச விசாரணை ஒன்று நடப்பதை தவிர்த்ததால், இலங்கைக்கு அங்கு ஓரளவு வெற்றி கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

”நாங்கள் தற்போதைய சூழ்நிலையில் ஓரளவு வெற்றியை அடைந்திருக்கிறோம். அதாவது சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு மாற்றப்பட்டிருக்கிறது. சர்வதேச விசாரணைக்கு தமது ஆதரவு கிடைக்காது என்று பல நாடுகள் கூறியிருந்தன. ஆனால் கடைசி தருணத்தில் கூட தற்போதிருக்கின்ற தீர்மான வரைவில் திருத்தம் கொண்டுவரப்படலாம். அதனால் நாங்கள் அதுபற்றி அதிகளவில் மகிழ்ச்சியடைவது கூடாது.” என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். -BBC

TAGS: