இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று, ஐநா பொது செயலாளர் பான் கீ மூனினால் இலங்கை தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவின் அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அது கலைக்கப்பட்டது.
இந்தநிலையில் அதில் அங்கம் வகித்த மர்சூகி தருஸ்மான், ஸ்டீவன் ரட்னர் மற்றும் யாசின் சூக்கா ஆகியோர் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் இலங்கை விடயம் தொடர்பில் எழுதியுள்ளனர்.
அதில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கட்டாயம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழ் பிரதேசங்களில் காணப்படும் அதிக இராணுவ பிரசன்னம், ஊடகவியலாளர்கள் காணாமல் போதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் பயன்மிக்கதாக அமையும்.
அதேநேரம் இந்த விசாரணைக்கான நிதி பிரச்சினைகள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவதானம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.