இலங்கை மீதான விசாரணையில் மாற்றமில்லை! 14 லட்சம் அமெரிக்க டொலர் தேவை என மதிப்பீடு!

rajapakshaஇலங்கையில் விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுமதி மறுக்கப்படுமானால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆணையாளர் அலுவலகம் விசாரணை மேற்கொள்ளும் என்று ஜெனிவா தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 2002 ம் ஆண்டு தொடக்கம் 2009 ம் ஆண்டு வரையில்  இலங்கையில் இடம்பெற்ற பெரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் பரந்தளவிலான விசாரணைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொள்வதற்கான அனுமதியை கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் வழங்கியுள்ளது.

இந்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கையின் ஒத்துழைப்பைக் கோரும் என்று ஜெனிவா தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் விசாரணை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு அனுமதியளிக்கப்படாதென்பதுடன், எந்த உதவிகளையும் இலங்கை அரசு வழங்காது என்று திட்டவட்டமாக இலங்கை அரசின் சார்பில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை மீதான விசாரணைகள் கைவிடப்பட மாட்டாது. வேறு நாடுகளிலிருந்து இந்த விசாரணைகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும்.

இதே போன்று ஏனைய நாடுகள் மீது மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கடந்த காலத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது என்று அந்த ஜெனிவாத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச விசாரணைகள் மேற்கொள்வது, அரசுகளுக்கு நன்மை பயக்காது என்பதால், அரசுகளின் ஒத்துழைப்புக்களை இதில் பெற முடியாது என்றும் அந்தத் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன என்று அந்த ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை மீதான விசாரணைக்கு 14 லட்சம் அமெரிக்க டொலர் தேவை

இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 14 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர் தேவை என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த வாரம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானம், இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தி முடிப்பதற்கு 14லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை இலங்கை நாணயப் பெறுமதியின்படி 190.822 மில்லியன் ரூபாவாகும்.

இதேவேளை இத்தகைய பெருந்தொகை நிதி ஐ.நா மனித உரிமைகள் சபையில் இல்லை என்பதை காரணம் காட்டியே, பாகிஸ்தான் குறித்த தீர்மானத்தை இடைநிறுத்தும் பிரேரணையை முன்வைத்திருந்திருந்தது.

இருப்பினும் குறித்த நிதியை ஐ.நா மனித உரிமைகள் சபையின் விசேட வரவு செலவுத் திட்டம் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபை தெரிவித்திருந்தது.

TAGS: