வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு

vikneswaran01வடக்கில் எங்கும் இராணுவத்தின் அதிகாரமே தலைவிரித்தாடுகிறது – வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு

வடக்கில் எங்கும் இராணுவத்தின் அதிகாரமே தலைவிரித்தாடுகின்றது. போர் முடிந்து இந்தனை ஆண்டுகளாகியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வடக்கு மாகாணத்தில் இராணுவவத்திடமே அதிகாரங்களைக் கொடுத்துள்ளார் என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கொதிப்புடன் தெரிவித்துள்ளார்.

இன்று (31) கொழும்பில் நடைபெற்ற ஜக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் பேர்னாட் சொய்சாவின் 100 ஆவது ஜனனதின நினைவுகூறல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,போர் முடிந்த போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பாங்கிமூன் அவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளிப் படுத்தினார். அவர் அரசியல் தீர்வொன்றை வெகு விரைவில் காணப்போவதாகவும் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தப்போவதாகவும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களைத் தத்தமது
வசிப்பிடங்களில் குடியமர்த்தி அவர்களுக்காவன செய்யப்போவதாகவும் மனித உரிமைப் பாதுகாப்பு சம்பந்தமான வழிமுறைகளைச் சர்வதேச நிலைக் கேற்றவாறு நடைமுறைப்படுத்தப் போவதாகவும் மனித உரிமைக் குற்றம் இழைத்தவர்களைத் தண்டிக்க ஆவன செய்யப் போவதாகவும் மற்றவற்றிற்கிடையில் உறுதி அளித்தார்.

ஆனால் நடந்தது என்ன? அரசியல் தீர்வைப் பெறுவதில் அரசாங்கம் அசமந்தப் போக்கையே வெளிக்காட்டி வருகிறது. 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் தரப்பட்டிருக்கும் ஒரு சில உரிமைகளையும் வடமாகாண சபைக்குத் தராது இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை நாளாந்தம் மோசமாகிக் கொண்டு வருகிறது. வலிகாமம் வடக்கில் 6000ற்கும் மேலான ஏக்கர் வளமுடைய காணி மக்களிடம் இருந்து பறித்தெடுத்து இராணுவம் பயிர்செய்து பல மாளிகைகள் கட்டி, காணியின் சொந்தக்காரர்களின் எதிர்பார்ப்பைப் பகற்கனவாக்கி வைத்துள்ளார்கள். எங்கும் இராணுவத்தின் அதிகாரமே வடமாகாணத்தில் தலைவிரித்தாடுகின்றது.

மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்போம் என்ற அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் அண்மைக் காலங்களில் ஈடுபட்டு வருகிறது. புலிகள் வருகின்றார்கள் என்ற புருடாவைப் புனைந்துரைத்துப் புதிதாக மனித உரிமை மீறல்களைப் புரியத் தொடங்கியுள்ளார்கள் படையினரும் பொலிசாரும். குற்றச் செயல்கள் கூடிக் கொண்டு செல்கின்றன. குற்றம் இழைத்தவர்களை கூட்டில் நிறுத்தாது அவர்களுடன் அரசாங்கம் கூடிக் குலாவி வருகின்றது.

எனவே பெரும்பான்மை மக்கள் தமிழ்த்தேசியத்தையும் வேண்டுமெனில் இஸ்லாமிய மக்களின் தேசியத்தையும் ஏற்றுக்கொண்டால்த்தான் விடிவை நோக்கி நாம் செல்லலாம். தமிழ்ப்பேசும் மக்கள் சமாதானத்திற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள். தேசியப் பிரச்சினையைத் தீர்க்கப் பெரும்பான்மையின மக்களும் அவர்களின் அரசியல் தலைவர்களும் ஆயத்தமாகி இருக்கின்றார்களா? அதற்கான அரசியல் மனோதிடம் அவர்களுக்கு ஏற்படுமா? காலந்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

இனப்பிரச்சினையை தீர்க்கும் அக்கறை ஜனாதிபதியிடம் இல்லை: சீ.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

தேசிய இனப்பிரச்சினை தீர்ப்பதில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அக்கறை இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆனால் தாம் முன்வைத்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையாததால்தான் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதிருப்பதாக அவர் போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாட்டங்களில் இராணுவத்தின் உதவியுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் மாத்திரமே அரசாங்கம் அக்கறைக் கொண்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் குடியேறும் சிங்கள மக்களுக்கு இலவசமாக காணிகள் பகிரப்படுவதாகவும், அது தொடர்பாக இராணுவத்தினரால் வவுனியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

TAGS: