இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை எவ்வாறு கையாள்வது குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ள இலங்கை அரசு, சர்வதேச சட்டங்களை நன்கு ஆராய்ந்து இந்த விடயத்தைக் கையாள்வதற்கான சரியான திட்டம் ஒன்றை விரைவில் வகுக்கவுள்ளோம் என்று தற்போது தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றி மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்துமாறு கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பிரேரணையை முற்றாக நிராகரித்துள்ள இலங்கை அரசு, அவ்வாறான ஒரு விசாரணை ஆரம்பிக்கப்படும் போது அதனை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது முறியடிப்பது என்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது என்று தெரிய வருகின்றது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
எமக்கு எதிராக நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முற்றாக நிராகரிக்கின்றோம். எனினும் அது குறித்து கவனம் எடுத்துள்ளோம். அந்த விவகாரத்தைக் கையாளுவதற்காக சர்வதேச சட்டங்களை நன்கு ஆராய்ந்து, மாற்றுத் திட்டமொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
ஐ.நா. சபையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அரசியல் ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் முக்கியத்துவமிக்கதாகக் காணப்படுகின்றது.
இந்த விடயத்தில் இந்தியாவும் எமக்கு ஆதரவு வழங்கும் என்று நம்புகின்றோம். என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதுகுறித்துக் கருத்துக் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன,
இந்த விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நாம் விரிவாக ஆராய்ந்து வருகின்றோம். இந்தியா இந்த விடயத்தில் எமக்கு ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம். உள்நாட்டுப் பிரச்சினைக்கு கடுமையாக முகங்கொடுத்து வரும் இந்தியா, இலங்கைக்கு ஏற்பட்ட நிலை எதிர்காலத்தில் தமக்கும் ஏற்படலாம் எனத் தூரநோக்குடனே சிந்தித்துச் செயற்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.