சர்வதேச விசாரணைகளில் எமக்கு நம்பிக்கையில்லை! நவிபிள்ளை வர அனுமதிக்கமாட்டோம்!- சமரசிங்க

navipillai_samarasingeஐநாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள போதும் இலங்கைக்கெதிரான சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென ஜெனிவாவுக்கான இலங்கையின் விசேட பிரதிநிதியான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

சர்வதேச விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயாரில்லாத நிலையில் ஆணையாளர் நவிபிள்ளையினால் விசாரணைகளை பலவந்தமாக எம்மீது திணிக்க இயலாது எனவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.

அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்குல நாடுகளால் இலங்கைக்கெதிராக பிரேரணை கொண்டு வரப்படுவதற்கு முன்பு அரசாங்கம் எந்த நிலைப்பாட்டிலிருந்ததோ அதே நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கிறது.

சர்வதேச விசாரணையில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. உள்ளக விசாரணைகளை நாம் தீவிரப்படுத்தியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இதன் மூலமாக நியாயத்தை நிலைநிறுத்த முடியுமென நாம் உறுதியாக நம்புகின்றோமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளக விசாரணைகள் நியாயமாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச விசாரணை அவசியப்படாது எனவும் அமைச்சர் சமரசிங்க வலியுறுத்தினார்.

சர்வதேச விசாரணையென்ற பெயரில் எமது செயற்பாடுகளுக்குள் விரலையிட்டு நாட்டில் குழப்ப நிலையினை உண்டுபண்ண வேண்டுமென்பதே மேற்குலக நாடுகளின் விருப்பமாகும். இதற்காகவே, இவர்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டுமென ஒரேபிடியாக இருப்பதுடன் பலவந்தமாக ஏனைய நாடுகளையும் தமது பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்க வைத்துள்ளனர்.

சர்வதேச விசாரணை இலங்கைக்கு பொருத்தமில்லாத ஒரு விடயமாகும். இதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் பொறுப்பேற்கப் போவதுமில்லை. நவிபிள்ளை தலைமையிலான விசாரணைகளுக்கு நாம் எந்த வகையிலும் தயாரில்லாத அதேசமயம் இதனை முன்னெடுப்பதற்கு நாம் இடம்வழங்கப் போவதில்லையெனவும் அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.

நவிபிள்ளை இலங்கை வருவதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்த போதிலும், அவர் இங்கு வந்து இலங்கை குறித்த தவறான கருத்துகள் அடங்கிய அறிக்கையினையே சர்வதேசத்திற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், எதற்காக அவர் மீண்டும் இலங்கை வர அனுமதிக்க வேண்டுமெனவும் அவர் கேள்வியெழுப்பினார். அப்படியே எமது நாட்டிற்கு அவர் வந்தாலும் இலங்கை குறித்த பிழையான அறிக்கையினையே அவர் மீண்டும் முன்வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே அவர் மீண்டும் நாட்டிற்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்காது. நவிபிள்ளை மட்டுமல்ல, எந்தவொரு வெளிநாட்டுப் பிரதிநிதியும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி நாட்டிற்குள் வர முடியாது எனவும் அமைச்சர் கூறினார்.

TAGS: