மனித உரிமை மீறல்: விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்

bankimonஇலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மேற்கொள்ளவிருக்கும் விசாரணைக்கு அந்த நாட்டு அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த ஐ.நா. பொதுச் செயலாளரின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறியதாவது:

இலங்கையில் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பான விசாரணையின் முக்கியத்துவத்தை பான் கீ மூன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இலங்கையில் முறையான விசாரணை மேற்கொண்டு, அமைதியை ஏற்படுத்தவும் நல்லிணக்கத்தை உருவாக்கவும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் தலைவர் நவநீதம் பிள்ளை உறுதி பூண்டிருப்பதை அவர் வரவேற்றுள்ளார்.

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று 2009ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச உறுதி அளித்துள்ளார்.

அதன்படி அந்த அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார் என்றார் பர்ஹான் ஹக்.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்தததாக அந்த நாட்டின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அந்த நாட்டுக்கு எதிராக கடந்த மாதம் 27ஆம் தேதி, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்தை ஆதரித்து 23 நாடுகளும், எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது. இந்நிலையில், அந்த நாட்டின் மீது மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணை குறித்து பான் கீ முன் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வாக்கெடுப்புக்குப் பின்னர் பேட்டியளித்த இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே, “”மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் பங்கேற்கவும் மாட்டோம், ஒத்துழைப்பு வழங்கவும் மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.

TAGS: