சிறிலங்காவில் போரின் முழுக்காலப் பகுதியிலும், எல்லாத் தரப்பினராலும், மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகள் தொடர்பாகவும், நம்பகமான- சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது நாட்டுக்கு நன்மையளிக்கும் என்று அமெரிக்கா உணர்வதாக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தில், 2002 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதி குறித்து விசாரணை மட்டுப்படுத்தப்பட்டது ஏன் என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதற்காக, 2002 தொடக்கம், 2009 வரையான காலப்பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்து மட்டுமே அனைத்துலக சமூகம் கவனம் செலுத்துகிறது என்று அர்த்தமில்லை.
உண்மையில் போரின் முழுக்காலப் பகுதியிலும் எல்லாத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகள் குறித்தும், சுதந்திரமான, நம்பகமான விசாரணைகள், நடத்தப்படுவது சிறிலங்காவுக்கு நல்லது.
தீர்மானம் மற்றும் அதில் கோரப்பட்டுள்ள அனைத்துலக சுதந்திர விசாரணைக்கான அழைப்பானது, எந்தவகையிலும் உண்மையான, நம்பகமான, வெளிப்படையான உள்ளக செயல்முறைகளைத் தடை செய்வதற்கானது அல்ல.
உண்மையில், அதற்கு ஆதரவு வழங்குவதே இதன் நோக்கம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் சொந்த முயற்சிகளுக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் ஆதரவு வழங்க வேண்டும் என்பதுடன், விசாரணைகளையும் நடத்த முடியும்.
அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது, நல்லிணக்கம், எல்லோரும் மனிதஉரிமைகளை அனுபவிப்பது உள்ளிட்ட தனது கடப்பாடுகளை நிறைவேற்றவும் இந்த தீர்மானம், சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருகிறது.
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் சிறிலங்காவில் பிளவுகளை ஏற்படுத்தவில்லை.
எந்தவொரு தீர்மானமும் கொண்டு வரப்பட முன்னரே சிறிலங்காவில் நீண்டகாலமாக இனங்களுக்கு இடையிலான பிளவுகள் இருந்து வருகின்றன.
ஈரான், சிரியா, வடகொரியா, பர்மா, லிபியா, மாலி, கினியா, ஹெய்டி, தென்சூடான போன்ற நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாகவும் சிறிலங்காவைப் போன்றே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.