தமிழ் இளைஞர்களை வன்முறைக்கு மீண்டும் இழுக்க அரசாங்கம் முயற்சி

suresh-premachandranதமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப்பட்ட தமிழ் அமைப்புக்களை தடை செய்யும் இலங்கை அரசாங்கத்தின் பாஷிச போக்கிற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது. என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

15 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்படவுள்ளமை குறித்துக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணை ஒன்றினை கொண்டுவருவதற்காக மேற்படி புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வந்திருந்தன.

இதனை கருத்திற் கொண்டே மேற்படி அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் குறித்த அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் இரகசியமாக இயங்கவில்லை.

மிக வெளிப்படையாக அந்த நாட்டின் அங்கீகாரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவ்வமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்யலாம். ஆனால் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்தின் பாஷிச போக்கு எடுபடப்போவதில்லை.

ஆனால் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்துவதற்கு இது சந்தர்ப்பமாக அமைந்திருக்கின்றது. மேலும் மேற்படி தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் உள்நாட்டில் உள்ள ஜனநாயக அரசியல் கட்சிகளை அல்லது கட்சியின் முக்கிஸ்தர்களை முடக்குவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கின்றது.

நிறைவேற்றப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக்கு பழிவாங்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு அர சியல் தீர்வொன்றினை வழங்காமல் மீண்டும் இந்த நாட்டில் புலிகள் செயற்படுகின்றார்கள் என்றவாறான தோற்றப்பாட்டை உருவாக்கவும் நினைக்கின்றார்கள். இதற்காகவே பல தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருக்கின்றது.

எனவே சர்வதேச நாடுகள இலங்கை அரசின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்ககூடாது. முன்னதாக படைக்குறைப்பு, மீள்குடியேற்றம் போன்றன நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையிலும், நிறைவேற்றப்பட்டுள்ள சர்வதேச விசாரணையிலும், குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

எனவே அவை நிறைவேற்றப்படும் என நாம் நம்புகின்றோம். மேலும் தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை மீண்டும் வன்முறைப் பாதைக்கு இழுப்பதற்காக செயற்பாடுகள் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டிருககின்றது. அதன் மூலம் மீளவும் பலரை கைதுசெய்ய அரசு நினைக்கின்றது.

வடக்கில் போரின் பின்னர் எவ்வாறான வன்முறைகளும் நடைபெற்றிருக்கவில்லை. அரசின் நோக்கை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய நோக்கம் மற்றும் நடைபெறும் அனைத்து விடயங்களையும் நாங்கள் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். அந்தவகையில் சர்வதேசம் இந்தவிடயத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றார்.

TAGS: