இலங்கையைத் தண்டிக்குமா அமெரிக்கா!

usa_indian flagஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய சில நாட்களில், கொழும்பில் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒரு பாதுகாப்புக் கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடமும், இலங்கை பாதுகாப்பு அமை ச்சின் கூட்டுப்படைத் தலைமையகமும் இணைந்து ஒழுங்கு செய்த- வுநஅpநளவ நுஒpசநளள ௲ 24 என்ற இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த 1ஆம் திகதி தொடக்கம் கலதாரி விடுதியில் நடந்து வருகிறது.

எதிர்வரும் 9ஆம் திகதி வரை தொடரும் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில், இலங்கை மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தான் அதிகளவில் பங்கேற்றுள்ளனர்.

இவை தவிர, சுமார் 15 நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளும் கண்காணிப்பாளர்களாக இதில் பங்கேற்கின்றனர். இதனை ஒன்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புக் கருத்தரங்கு என்று கூற முடியாது. இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வது பற்றிய ஒரு பயிற்சிப் பட்டறைதான் இது.

ஆயுத தளபாடங்கள் பற்றிய விளக்கங்களுக்கோ, போர் உத்திகள் பற்றிய ஆலோசனைகளுக்கோ இதில் இடமில்லை.எல்லாமே, அனர்த்த முகாமைத்துவ திட்டமிடல் சார்ந்த பயிற்சிகளும் விளக்கங்களும் தான்.

ஆனாலும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து அமெரிக்கா நடத்தும், இந்தக் கருத்தரங்கை பலரும் வியப்புடன் நோக்கியது ஆச்சரியமானதே.

இலங்கையுடன் அமெரிக்கா ஜெனீவாவில் மோதல் ௲ கொழும்பில் கூடல்” என்று ஊடகங்களில் வெளியான செய்தி, பலரது கண்களையும் கவர்வதற்கான தலைப்பாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை ஆனால், அதனூடாகச் சொல்ல முனைந்த செய்தியின் பரிமாணம் யதார்த்தத்துக்கு முரணானது.

அதாவது ஜெனீவாவில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா, இலங்கையுடன் இணைந்து பயிற்சி நடத்துகிறது என்பதன் ஊடாக, அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதான கருத்தை உருவாக்க ஊடகங்கள் பலவும் முயன்றதைக் காணமுடிகிறது.

ஆனால், அமெரிக்காவை சரியாக விளங்கிக் கொள்ளாதவர்களுக்கே அது ஆச்சரியமானதாகவோ அதிர்ச்சியானதாகவோ இருந்திருக்கும்.
ஏனென்றால், இலங்கையுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது என்பதோ, அத்தகைய நிலைக்கு இட்டுச் செல்ல முனைகிறது என்பதோ தவறான கருத்து.

இலங்கையை தன் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொள்வது என்பது அமெரிக்காவினது தந்திரோபாயமே தவிர, அதனை விட்டு ஒதுங்கி நிற்பதோ, அதனை தனது நிழலில் இருந்து விரட்டி விடுவதோ அமெரிக்காவினது இலக்கு அல்ல.

அமெரிக்காவினது இந்த இலக்கினை சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி, ஐ.தே.க, முஸ்லிம் காங்கிரஸ் போன்றன தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளன என்பதை, ஜெனீவா தீர்மானம் தொடர்பாக அவை வெளிப்படுத்தியுள்ள கருத்துகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

அதாவது, ஜெனீவா தீர்மானம் என்பது இலங்கை என்ற நாட்டுக்கு எதிரானது அல்ல என்றும், அது இலங்கை ஆட்சியாளர்களுக்கு மட்டுமே எதிரானது என்றும் இந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்தியப் பெருங்கடலில், கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவை தனது விரோதியாக்கிக் கொள்வதற்கு அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.

அந்த உண்மையை, கொழும்பு அரசியல் கட்சிகள் மத்தியில் அமெரிக்கா நன்றாகவே தெளிவுபடுத்தியிருக்கிறது என்பதை, ஜெனீவா தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்ப்புத் தோன்றாததை வைத்தே உணர முடிகிறது.

இந்த விளக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா கடுமையாக பணியாற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், சிங்களத் தேசியவாதத்தை தட்டியெழுப்புவதற்கான ஒரு கருவியாகவே இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தை பயன்படுத்த முனைந்தது.

இத்தகைய சூழலிலும், கொழும்பு அரசியல் கட்சிகள் மத்தியில் அமெரிக்கத் தீர்மானத்தை சரியாக விளங்கிக் கொள்ளும் நிலை காணப்பட்டது. இது அமெரிக்காவுக்கு சாதகமானதொரு விடயம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இலங்கையிடம் எதிர்பார்ப்பது நிலையான அமைதிக்கும், நல்லிணக்கத்துக்குமான சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தான்.

அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத்தக்க நிலையில் இந்த அரசாங்கம் இல்லாத காரணத்தினால் தான், அதனை தன் வழிக்குக் கொண்டு வருவதற்கு பல்வேறு வழிகளையும் கையாள முற்படுகிறது.அதில் ஒன்று தான் ஜெனீவா ஊடாக கொடுக்கப்படும் அழுத்தம்.

அமெரிக்கா மற்றும் மேற்குலகினது கரிசனைகளைக் கருத்திலெடுத்து, அவற்றின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருக்குமேயானால், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளை விடவும், இலங்கைக்கு வலுவான கவசமாக அமெரிக்கா மாறிவிடும்.

ஆனால், அரசாங்கம் வேறு விதமாக சிந்திக்கிறது. மேற்குலகினது எதிர்பார்ப்புக்கமைய நடந்து கொள்ள முனைந்தால், அது தனது காலடிக்குக் கீழ் குழி தோண்டுவதற்கு சமமாகி விடும் என்று அது கருதுகிறது.

போர் நடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறவைக்கும் சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுப்பதானது, ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை படுகுழிக்குள் தள்ளிவிடும். எனவே தான், அமெரிக்கா பக்கம் சாயாமல் சீனா-, ரஷ்யாவின் நிழலில் நிற்க விரும்புகிறது இலங்கை அரசாங்கம்.

அதற்காக, இலங்கையைத் தண்டிக்கும் அளவுக்கு அமெரிக்கா முடிவுகளை எடுக்கவோ, நடவடிக்கைகளில் இறங்கவோ இல்லை.
இப்போது, ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் கூட இலங்கையைத் தண்டிப்பதற்கானது அல்ல, இலங்கைக்கு உதவுவதற்கானதே என்று அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் திரும்பத் திரும்பக் கூறுவதை அவதானிக்கலாம்.

இலங்கை அரசாங்கம் நிராகரிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டே, அது இலங்கைக்கே பயனளிக்கும் என்று மேற்கு நாடுகள் கூறுவது சற்றுக்குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால், உண்மை அது தான்.

அதாவது, இலங்கைக்கு எதிரான எந்த நகர்வையும் இந்த தீர்மானம் வெளிப்படுத்தவில்லை. ஆனால், இது இலங்கை அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. இலங்கை அரசு என்பது வேறு. அதை நிர்வகிக்கும் அரசாங்கம் என்பது வேறு.

இலங்கை அரசை நிர்வகிக்கும் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு இந்த தீர்மானத்தினால் பாதிப்பு ஏற்படலாம் என்ற போதிலும், அது இலங்கை அரசுக்கு நன்மையையே அளிக்கும் என்பதே மேற்குலக கருத்தாக உள்ளது.

அதாவது, நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றினால், அது இலங்கையின் எதிர்காலத்துக்கு சாதகமாக அமையும் என்றே மேற்குலகம் கருதுகிறது, ஆனால், அரசாங்கமோ அது தமக்குப் பாதகமாக அமையும் என்று அச்சம் கொள்கிறது.

இதனால் தான், அமெரிக்காவுடன் அது முட்டி மோதுகிறது. ஆனாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளைத் துண்டிக்கும் அளவுக்குச் செல்ல முனையவில்லை.

அதனால் தான், எந்தச் சிக்கலுமின்றி கொழும்பில் பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்தி வருகிறது அமெரிக்கா. இதுமட்டுமன்றி, வேறும் பல பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்களையும் அமெரிக்கா நடைமுறைப்படுத்தி வருகிறது.

பசுபிக் கட்டளைப் பீடமே இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது- கண்காணிக்கிறது. எனினும், ஜெனீவா தீர்மானத்துக்கு முன்னதாக வடக்கில் மூன்று பாடசாலைகளை முழு அளவில் வசதிகளைக் கொண்டதாக புனரமைக்கும் திட்டம் ஒன்றை பசுபிக் கட்டளைப்பீடம் முன்வைத்திருந்த போதிலும் அதை அமைச்சரவை நிராகரித்திருந்தது. ஆனால் பின்னர், அரசாங்கம் அந்த திட்டத்தை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முன்வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்போதும் கூட, அமெரிக்கா – இலங்கை பாதுகாப்பு உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்த சம்பவமும் நிகழ்ந்து விட்டதாகக் கூறிவிட முடியாது. ஆனால், இந்த நிலைமை நிரந்தரமானது என்று உறுதிப்படுத்த முடியாது.

ஏனென்றால், ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இடமளிக்க மறுத்தால்- அதாவது சர்வதேச விசாரணைக் குழுவை அனுமதிக்க மறுத்தால், இலங்கை மீதான பிடியை மேற்குலகம் இறுக்க வேண்டியிருக்கும்.அது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் விரிசல்களைக் கொண்டு வரலாம்.

ஆனாலும், முடிந்தவரைக்கும் அமெரிக்கா அத்தகைய உறவுகளைத் துண்டிக்காமல் வேறு வழிகளிலேயே இலங்கையை வழிக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும். ஏனென்றால், இலங்கையின் கேந்திரத் தன்மையின் முக்கியத்துவத்தையும்,அதன் மீதான பிடியையும் அமெரிக்கா அவ்வளவு இலகுவாக விட்டுக் கொடுத்து விடாது.

-ஹரிகரன்

TAGS: