இலங்கை மீதான விசாரணை! ஐநா நிபுணர் குழு நியமனம்!

navaneethampillai201ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியதன் பிரகாரம் விசாரணைக்கான  நிபுணர் குழுவொன்று மே மாத  நடுப்பகுதியில் நியமிக்கப்படலாம் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2002-2009 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த விசாரணைக் குழு ஆராயவுள்ளது என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணையானது நாடுகளால் அன்றி ஒரு நிபுணர்கள் குழுவினராலேயே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 27 வது அமர்வில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வாய்மொழி மூலம் இற்றைப்படுத்தலொன்றை செய்ய வேண்டியுள்ளதால் இந்த விடயங்கள் விரைவுபடுத்தப்படும்.

அதேவேளை, 2015 ம் ஆண்டு மார்ச்சில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 28 வது அமர்வில் உயர்ஸ்தானிகர் அலுவலகம் முழுமையான அறிக்கையொன்றை வழங்கவேண்டும்.

மனித உரிமை ஆணையாளர் அலுவலகம், இலங்கையின் சொந்த விசாரணை செயன்முறை எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது. எனவும் மதிப்பீடு செய்யும். இந்த விடயங்களில் இலங்கை அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்கவேண்டும் என்றும் ஜெனீவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் பாராமுகமாக உள்ளது. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பதாக கூறியதற்கு அப்பால் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளியிலிருந்து வரும் விசாரணை பொறிமுறையை ஏற்கவேண்டும் என்று கூறும் ஒருபிரிவினரும், அவ்வாறான ஒரு பொறிமுறையினை ஏற்கக்கூடாது என்று கூறுகின்ற மற்றொரு பிரிவினரும் இலங்கை அரசாங்கத்திற்குள் இருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கின்ற 47 நாடுகளில் 24 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவு இல்லை என்றும் உண்மையில் இலங்கைக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் ஆகையால் சர்வதேச பொறிமுறை தேவையில்லை என்ற சிந்தனையிலேயே இலங்கை இருக்கின்றது.

ஆனாலும், சர்வதேச பொறிமுறை வரத்தான் போகின்றது. இது நீண்ட காலத்திற்கு இலங்கை மீது ஒரு பழுவாக இருக்கும். காலம் போய்க்கொண்டிருக்கின்றது என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையானது நம்பகரமான தேசிய பொறிமுறையொன்றை உருவாக்கி அதில் முன்னேற்றத்தை காட்டவேண்டும் எனவும், அதற்கமைய நடக்குமாறும் இந்தியாவும் ஜப்பானும் இலங்கையை இரகசியமாக வற்புறுத்துகின்றன.

விசாரணையின் கடுமையை குறைப்பதாயின் இலங்கையானது நம்பகரமான தேசிய பொறிமுறையை உருவாக்கவேண்டும் எனவும் அதிகார பரவலாக்கல் ஊடாக பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்றும் இலங்கையை இந்தியா வலியுறுத்துகின்றது.

இவ்வாறான நிலையில் நல்லிணக்கம் தொடர்பில் திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜப்பான் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

TAGS: