இலங்கை அரசாங்கம் இராணுவ தீர்வினை நம்பியதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான மக்களை இறுதி யுத்தத்தில் கொன்று குவித்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
த இன்டிபென்டன்ட் பத்திரிகைக்கு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருவாண்டாவில் 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் அவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
இதில், 20 வருடங்களுக்கு முன்னர் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளை தற்போதைய அரச தலைவர்கள் அவர்களின் நாடுகளில் நடத்தி வருகின்றனர்.
சிரியாவில் கடந்த மூன்று வருடங்களில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டனர்.
இவை அனைத்துக்கும் அந்தந்த நாடுகள் தங்களின் பிரச்சினைகளுக்கு இராணுவம் தான் தீர்வு என்று நம்பியமையே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் உதவிகளின் மூலம் சிராலியோன் மற்றும் திமோர் போன்ற நாடுகள் தங்களின் உள்நாட்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கமும், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு பெற்று, தங்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.