பசில் ராஜபக்சவை சந்திக்க மறுத்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – மத்திய அரசின் மீது கடும் அதிருப்தி

vikneswaran01சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துப் பேசுவதற்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளதாக, யாழ்ப்பாண ஊடகத் தகவல் ஒன்று கூறுகிறது.   வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், பசில் ராஜபக் ச விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள இடைவெளி குறித்துப் பேசுவதற்கே இந்தச் சந்திப்புக்கு, பசில் ராஜபக்ச தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.   ஆனால், சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சு மூலம், எந்தப் பயனும் ஏற்படாத நிலையில், இந்தச் சந்திப்பு அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக் கொள்ளவில்லை கூறப்படுகிறது.   வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும், வடக்கு மாகாண தலைமைச் செயலர் விஜயலக்சுமி ரமேஸ் ஆகியோரை உடனடியாக மாற்றம் செய்யுமாறு சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போது, வடக்கு மாகாண முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு சிறிலங்கா அதிபர் இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.   இந்தச் சூழலிலேயே, பசில் ராஜபக்சவின் சந்திக்க அவர் மறுப்புத் தெரிவித்து விட்டதாகவும், சிறிலங்கா அரசாங்கம் நேர்மையாகச் செயற்படுவதை செயலில் காட்டாத வரையில், இத்தகைய சந்திப்புக்களால் பயன் ஏதும் இல்லை என்று முதலமைச்சர் கருதுவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி யாழ்ப்பாண ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: