முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்த்தப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவுக்கு வரும் நாட்களில், மீண்டும் வன்முறைப் பாதை ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை தமிழ் மக்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் வலிந்து திணித்து வருகின்றார்கள்.
வரைமுறையற்ற சிங்கள அரச பயங்கரவாதத்தால், தமிழீழம் மீண்டும் அதி உச்சபட்ச அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
வாழ்வதற்கான அத்தனை அனுகூலங்களும் அடைக்கப்பட்டு விட்டதனால், சாவுக்கு முந்தைய போராட்டம் ஒன்றே சாத்தியமாகும் நிலையே தமிழ் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
நீதி மறுக்கப்பட்டவர்கள் மீண்டும் போராடுவது தவிர்க்க முடியாதது என்ற விதிக்கு தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.
அநீதிகள் எப்போதுமே தொடர்ந்து ஆட்சியில் நிலை கொண்டதாக வரலாறு இல்லை.
அதனையே தமது வெற்றிக்கான வழியாகக் கொண்ட யாரும் காலத்தின் பிடியிலிருந்து தப்பியதான பதிவுகளும் கிடையாது.
தாமதமாகவேனும் உலகில் நீதி நிலைபெறும் என்ற நம்பிக்கையே இப்போதும் தமிழ் மக்களைக் காக்க வைத்துள்ளது.
சிங்கள தேசம் ‘முள்ளிவாய்க்கால் பேரழிவினை’ கொண்டாடுவதற்காக மீண்டும் ஒரு விழாக் கோலம் கொள்ளத் தயாராகி வருகின்றது.
நாகரீகமடைய மறுக்கும் ஒரு சமூகத்தின் அதி உச்ச வெளிப்பாடாகவே உலகம் அதனை எடைபோடுகின்றது.
தன் தேசத்தில் வாழ்ந்த சக மனித குழுமத்தை மிகக் கொடூரமாக அழித்த நாட்களின் இறுதியை சிங்கள இனம் வெற்றிப் பெருமிதத்தோடும், அதே தினத்தை, ஈழத் தமிழினம் தங்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு தினமாக எதிர் நிலையோடும் இலங்கைத் தீவு இப்போதும் பிளவுபட்டே நிற்கின்றது.
இதற்காக, சிங்கள இனம் எப்போதுமே வெட்கப்படப் போவதும் இல்லை.
ஆனால், இன்னொரு பேரழிவின் தொடக்கமாகவே இது இருக்கப் போகின்றது என்பதே வரலாற்றாளர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படாவிட்டால், மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வெடிக்காது என்பதை உத்தரவாதப்படுத்த முடியாது என்பதே மேற்குலகின் கருத்தாகவும் உள்ளது.
அமெரிக்காவும், அதனைப் பல தடவை வலியுறுத்தியும் உள்ளது.
ஆயுதத்தால், எதையும் சாதிக்க முடியும் என்பதாக இருந்தால், ஹிட்லரும், முசோலினியும் வெற்றி நாயகர்களாகவே இருந்திருப்பார்கள்.
அநீதி மட்டுமே உலகை ஆளும் என்பதாக இருந்தால், உலகின் பல நாடுகள் இன்றும் அடிமையாகவே அழுந்திக் கிடந்திருக்கும்.
அரச வன்முறைகளுக்கெதிரான மக்களின் கிளர்ச்சியே புரட்சிகளாக உலகில் போற்றப்படுகின்றன.
விடுதலைக்கான மக்களது எண்ணங்களை எந்த ஆயுதப் படையாலும் அடக்க முடியாது என்பதே வரலாறு.
சிங்கள ஆட்சியாளர்களது எல்லையற்ற வன்முறைகள் இன்னொரு போர்க்களத்தை நோக்கியே தமிழர்களை நகர்த்துகின்றது.
தனித்தனி மனிதர்கள் மீதான சிங்கள வன்முறைகளை எந்தத் தமிழனும் தனக்கானதல்ல என்று விலகிச் செல்ல முடியாது.
அது, நாளை நிகழப் போதும் நம் மீதான தாக்குதலுக்கான முன்னறிவித்தல் என்றே கொள்ள வேண்டும்.
முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள் என்ற ஜெர்மனிய சிந்தனையாளர் பசுடோர் நிமொல்லெர் அவர்களது கவிதையினை நாம் திரும்பத் திரும்பப் படிக்கும் காலத்தில் வாழ்கின்றோம்.
‘முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் யூதன் அல்ல!!!
பின்னர் அவர்கள் பொது உடைமைவாதிகளுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் பொது உடைமைவாதி அல்ல!!!
பின்னர் அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் தொழிற்சங்கத்து உறுப்பினன் அல்ல!!!
பின்னர் அவர்கள் எனக்காக வந்தார்கள்…
ஆதரவுக் குரலுக்காக சுற்றியும் பார்த்தேன்
எனக்கென குரல் கொடுக்க எவரும் எஞ்சி இருக்கவில்லை!!!’
ஹிட்லரின் காலத்தில் வாழ்ந்த ஒரு ‘சராசரி’ மனிதனைப் பற்றிய கவிதை அது.
அவன் தன்னைச் சுற்றிலும் நடந்த எந்த ஒரு அநியாயத்துக்கும் எதிராக குரல் கொடுக்கவில்லை. காரணம் அவனது பயம்… அவனது சுயநலம்… அவனது அறியாமை… என்று எதை வேண்டும் என்றாலும் கொள்ளலாம்.
அவன் அவ்வாறே இருந்து விட்டால் அவனுடைய வாழ்க்கைக்கும் அவனுடைய உலகத்திற்கும் எந்த தீங்கும் வந்து விடாது என்றே அவன் நம்பினான். அந்த நம்பிக்கையிலையே அவன் குருடனாய் நாட்களை கடத்துகின்றான்.
ஆனால் பயங்கரமான போர் நடந்து கொண்டு இருக்கும் போர்க்களத்திலே கண்களை மூடிக் கொள்வதால் மட்டுமே குண்டுகள் நம்மைத் தாக்காது சென்று விடுமா என்ன?
அதே போல் அவன் எந்த அநியாயம் தனக்கு நேராது என்று நம்பிக்கொண்டு இருந்தானோ அதே அநியாயம் அவனுக்கு நேரும் பொழுது அவனுக்கு ஆதரவான குரலுக்காக சுற்றியும் அலைகின்றான்.
ஆனால் பாவம்… புதைக்கப்பட்டவர்கள் பேச மாட்டார்கள் என்பதனை அவன் அறியும் காலமும் வருகின்றது.
‘ஐய்யோ…, நான் என்று அடுத்தவர்களுக்காக வாய் திறக்க மறுத்தேனோ அன்றே நான் புதைக்கப்பட்டு விட்டேனே… அன்று வராத வார்த்தை இன்று நிச்சயம் பயனில்லை’ என்றவாறே அவனின் முடிவை நோக்கி செல்கின்றான்.
எங்களது நிலையும் அவ்வாறுதான் இருக்கின்றது. நேற்று, அவர்கள் புதைக்கப்பட்ட போது… அச்சம் எங்கள் தேசத்து மக்களை வாயடைக்க வைத்தது.
முள்ளிவாய்க்காலும், முள்வேலி முகாமும் அவர்களை மௌனத்திற்குள் உறைய வைத்தது.
இழந்தவற்றை எல்லாமே துறந்துவிட்டு, இனி ஒரு வாழ்வு… என்ற எண்ணத்திற்கே இடமற்று, இப்போதும் சிங்களப் படைகளின் வெறியாட்டத்திற்குள் கிலி கொண்டு நிற்கின்றார்கள்.
மீண்டும், அவர்களைப் புதைப்பதற்கான நாள் பார்க்கப்படுகின்றது.
அவர்களை அழிப்பதற்கான இடம் தேடப்படுகின்றது.
ஒன்றாக… பலவாக… கைதுகள் தொடர்கின்றன. தடுப்புக் காவல்களும் அதிகரிக்கின்றன…
காணாமல் போனவர்கள்… எங்கெங்கோ, பிணங்களாகக் கண்டெடுக்கப்படுகின்றார்கள்.
சிங்களக் கொடூரங்களுக்கு இரையாக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் தூக்கிலே தொங்கவிடப்படுகின்றார்கள்…
கேட்பதற்கு யாருமே இல்லாமல், கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன.
இத்தனைக்குப் பின்னரும், புலம்பெயர் தமிழர்கள் பொங்கி எழாவிட்டால், எங்கள் தேசம் எங்கோ தொலைந்தே போகப் போகின்றது… எங்கள் தேசத்து மக்கள் அழிந்தே போகப் போகின்றார்கள்…
அதன் பின்னர்…. எங்களுக்கான எதுவுமே இல்லாத தேசத்தில்… எங்களுக்கான யாருமில்லாத காலத்தில்… எங்களுக்காகக் குரல் கொடுக்க யாருக்குமே அவசியம் இருக்கப் போவதில்லை…
– கரிகாலன்