சுண்டிக்குளமும் பறிபோகின்றது! துரோகத்தின் கூட்டுகளவாணிகளாக அரச அதிகாரிகள்!!

Cheddikulamவடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியினில் பெருமெடுப்பிலான சிங்கள குடியேற்றம் மற்றும் சுற்றுலா விடுதிகளை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.வடக்கினில் கோத்தா மற்றும் நாமல் ராஜபக்ஸ தரப்புக்கள் தமது முதலீடுகளை விஸ்தரித்துவருகின்ற நிலையினில் தற்போது ஓட்டப்பந்தயத்தினில் பிந்தி ஓடி வந்து பஸில்ராஜபக்சவும் இணைந்துள்ளார்.

இதன் பிரகாரம் சுண்டிக்குளம் பகுதியினில் சுமார் பத்து கிலோமீற்றர் நீளமுள்ள கடற்கரையினை உள்ளடக்கி இந்த குடியேற்றம் மற்றும் சுற்றுலா விடுதிகள் அமையவுள்ளது.இப்பகுதியினில் மீள்குடியமர்வதற்கான அனுமதியை பூர்வீக குடிகளான தமிழ் மக்களிற்கு நிராகரித்துள்ள அரசு மறுபுறம் இங்கு சிங்கள குடிகளை குடியமர்த்த முழு அளவினில் முயற்சிகளை அரங்கேற்றிவருகின்றது.

அவ்வகையினில் பஸில் ராஜபக்ஸவின் கீழுள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இரண்டு நாள் அவசர பயிற்சி பட்டறையினை இப்பகுதியினில் நேற்றும் நேற்று முன்தினமுமாக நடத்திவருகின்றது.கொழும்பினில் அலுவலக பணிக்கு செல்வதாக சொல்லிவிட்டு கடந்த இரண்டு நாட்களும் அங்கு தங்கியிருந்த யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறித்த பயிற்சிபட்டறைகளை முடித்து இன்று மதியமே செயலகம் திரும்பியுள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் முதல் நாள் அமர்வினில் தடாலடியாக சிறப்பு விருந்தினராக வந்திருந்த பஸில்ராஜபக்ச அமர்வுகளை பார்வையிட்டுள்ளார்.இவ்வமர்வுகளினில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று பங்கெடுத்துள்ளது.அத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்தினில் செயற்படும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளும் பங்கெடுத்துள்ளனர்.எனினும் ஊடகங்களிற்கு ரகசியம் காக்க கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வடமராட்சி கிழக்கின் கட்டைக்காட்டினை அண்டிய கேவில் பகுதியே இறுதி எல்லையாக மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியாகும்.அதற்கு அடுத்து முல்லைதீவினை அண்டிய சுண்டிக்குளம் கரையோடு இணைந்த ஆழ்கடல் மற்றும் களப்புகளை கொண்ட பிரதேசமாகும்.வடமராட்சியினை சேர்ந்த மீனவர்கள் கடந்த காலங்களினில் வாடிகளை அமைத்து தங்கியிருந்து தொழிலில் ஈடுபடும் முக்கிய பகுதியாகவும் சுண்டிக்குளமே இருந்திருந்தது.எனினும் தற்போது உள்ளுர் மீனவர்கள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் மீள்குடியமர்வு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்கு நிலைகொண்டுள்ள படையினரது முழுமையான பாதுகாப்புடன் நூற்றுக்கணக்கான சிங்கள மீனவர்கள் படைமுகாம்களினில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளினில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்நிலையினிலேயே குறித்த பிரதேசத்தினில் சுற்றுலா விடுதி மற்றும் இறால்பண்ணைகளை அமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையிலான கட்டடங்களை அமைத்தல் மற்றும் அது தொடர்பிலான விழிப்புணர்வினை குடியேற்றவாசிகளிற்கு வழங்குதல் எனும் தொனிப்பொருளினிலேயே இச்செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே கடற்படையினர்  மற்றும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள சுண்டிக்குளத்தின் எல்லையாகவுள்ள கேவில் பகுதியினில் புதிய நட்சத்திரவிடுதி ஒன்று அண்மையினில் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு சிங்கள சுற்றுலா பயணிகள் படைஎடுத்தும் வருகின்றனர்.இதற்கு மேலதிகமாக நெடுந்தீவினில் நாமல் ராஜபக்ஸவினது ஏற்பாட்டினில் நட்சத்திரவிடுதி அமைப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGS: